Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் டெங்கு... பதற்றத்தில் டெல்லி!

புதுடெல்லி: டெல்லியில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிப்பு அதிகம் இருக்கும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்தும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்தியாவை உலுக்கும் சுகாதார பாதிப்பாக டெங்கு காய்ச்சல் உருவாகியுள்ளது.மற்ற காய்ச்சல்போல் அல்லாமல் உயிரிழப்பு ஏற்படுத்தும் என்பதால் அச்சம் தரும் காய்ச்சலாக டெங்கு உள்ளது. டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்குகிறது.

டெல்லியில் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 60 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

'வைரஸ் காய்ச்சலில் முக்கியமானது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு ஊசியோ, தடுப்பு மருந்தோ கிடையாது என்பது அதிர்ச்சிகரமான விஷயம். 'ஏடிஸ் எஜிப்டி’ எனும் வகைக் கொசுக்கள் மூலம் இது பரவுகிறது. இந்தக் கொசுக்கள் பகல் நேரத்தில்தான் கடிக்கும். தேங்கி இருக்கும் நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இயல்பைக் கொண்டவை இவை. உடல் வலி, முதுகு வலி, காய்ச்சல், சமயத்தில் குளிருடன் காய்ச்சல், சிலருக்கு உடலில் சிவப்புப் புள்ளிகள் இவைதான் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.

டெங்கு காய்ச்சல் தாக்கியதும் ரத்தத்தில் ரத்தத்தட்டுகளின் எண்ணிக்கை குறையும். தொடக்கத்திலேயே காய்ச்சலைக் கவனிக்காமல் விட்டால், நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை எனப் பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்'' என்று எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.

டெல்லியில் கடந்த ஆண்டு ஜுன் மாத துவக்கத்தில் 6 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு புதுடெல்லியில் அதன் எண்ணிக்கை 28 ஆக உள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதனிடையே டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டியதாக டெல்லியின் 3 மாநகராட்சிகளின் கீழ்வரும் அரசு மருத்துவமனைகளான லேடி ஹாடிங், ராம் மனோகர் லோகியா, சப்தர்ஜங், எய்ம்ஸ் மற்றும் வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரி, டெல்லி உயர்நீதி மன்றம், அசோகா நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட1,286 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
கடந்த சில வாரங்களில் டெல்லியில் பெய்த கனமழைதான் டெங்கு காய்ச்சல் பரவலுக்குக் காரணம் என சொல்லப்படும் நிலையில் இதை தடுக்கும் முயற்சியில் டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழகத்திலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு இப்போதே எடுப்பது நல்லது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ