Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவ உலகில் பேசப்படாத 10 விஷயங்கள்...!

இன்று தேசிய மருத்துவர்கள் தினம். பிளஸ் 2 படிப்பில் மாநில அளவில் சிறப்பிடம் பிடிக்கும் மாணவர்கள் பலரும், ' எதிர்காலத்தில் மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்' என்கின்றனர். அவ்வாறு படிப்பை நிறைவு செய்யும் பலரும், ஏழை மக்களுக்காகத்தான் உழைக்கின்றனரா என்ற கேள்வியை யாரும் கேட்பதில்லை. ஒவ்வொருவர் வாழ்விலும் நோயும் மருத்துவமும் பிரிக்க முடியாதவையாகவே மாறிவிட்டன.

வாழ்வில் ஒருமுறையேனும் மருத்துவரையோ மருந்துகளையோ சந்திக்காமல்  யாரும் கடந்து போவதில்லை. சிறிய காய்ச்சல் உடலை வாட்டினாலும், டாக்டர்கள் நீட்டும் மருந்து பட்டைகளும் பரிசோதனைகளும் சாமான்ய மக்களை விழிபிதுங்கவே வைக்கின்றன. மாதாந்திர வீட்டு பட்ஜெட்டில், மருந்துக்கென தனி இடத்தை அளிக்காத குடும்பங்கள் மிகக் குறைவே. இன்று  மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவ உலகில் அதிகம் பேசப்படாத பத்து விஷயங்களைப் பற்றி, நம்மிடம்  பட்டியலிட்டார் கல்பாக்கம் மருத்துவர்.புகழேந்தி...

1. மருத்துவர் என்பவர், நோயாளியின் துணையுடன் மட்டுமே மருத்துவ அறிவினை மற்றும் நோய்கள் குறித்து முடிவெடுக்கும் திறனைப் பெறுகிறார். இதை நவீன மருத்துவ உலகின் தந்தை டாக்டர்.வில்லியம் ஆஸ்லர் இவ்வாறு குறிப்பிடுகிறார். " அடிப்படை நூல்கள் ஏதுமின்றி நோய்கள் குறித்து ஆய்வு செய்வது, முன்னெப்போதும் பயணப்படாத கடலின் புதிய வழித்தடங்களில் பயணிப்பதாகும். மாறாக, நோயாளிகளே இன்றி நூல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோய்களை அறிவது, எப்போதும் கடலுக்கே செல்லாமல் இருப்பதற்கு ஒப்பாகும்" என்கிறார். அதாவது, நோயாளியின் துணையின்றி மருத்துவரால் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. வெறும் புத்தக அறிவு மூலம் மருத்துவரால் எதையும் சாதிக்க இயலாது. ஆக, நோயாளியின் துணை காரணமாக பெற்ற மருத்துவ அறிவினை, அவர்களிடம் பகிர்ந்து கொள்வதை கடமையாக உணர்ந்து, அவர்களுக்குப் புரிந்த மொழியில், புரியும் வகையில் பிரச்னைகளை எடுத்துக்கூறி, அவர்களை மருத்துவ அதிகாரத்தின் காரணமாக ஏமாற்றாமல் இருப்பதுதான் மருத்துவர், நோயாளிக்கு செய்யும் மிகப் பெரிய உதவியாகும்.

2. நோய் வருவதற்கு பிரதான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். கிருமிகள் காரணம் அல்ல. ஒவ்வொருவர் உடம்பின் நோய் எதிர்க்கும் திறனே நோய் வருவதைத் தீர்மானிக்கிறது. காசநோய் பிரிவில் பணிபுரியும் பல மருத்துவர்களுக்கு அந்நோயின் கிருமிகள் உடலில் புகுந்தாலும் நோயை ஏற்படுத்துவதில்லை. எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைவுதான் நோய் வருவதற்கு பிரதான காரணமாக இருக்கிறது. நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதற்கு சத்தான சரிவிகித உணவு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுற்றுப்புறத் தூய்மை, நல்ல இருப்பிடம், உடை, செருப்பு போன்றவை மிக முக்கியம். இதைப் பற்றிய விழிப்பு உணர்வை நோயாளிகளிடம் மருத்துவர்கள் ஏற்படுத்த வேண்டும்.

3. மருத்துவத்தை 4D என அழைக்கின்றனர். மருத்துவமனை, மருத்துவர், மருந்து, மருந்து சோதனைகள் எனும் நான்கு சொல்லாடலுக்குள் அடக்குவது சரியானதல்ல. அவ்வாறு செய்வது அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

4. நோயாளிக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சை வழங்க நான்கு விதமான மருந்துகளே போதுமானது. அவற்றை எளிதில் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியும்.  ' கிராமங்களில் உள்ள 75 சதவீத நோய்களை சாதாரண மருத்துவர் மூலமாகவோ, ஓரளவு சமூகக் கண்ணோட்டமுள்ள கிராமப்புற இளைஞர்கள் மூலமாகவோ சரி செய்ய முடியும்' என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கூற்று. பொதுவான வியாதிகளை ஆங்கில மருத்துவத்தில் உள்ள நான்கு விதமான மருந்துகளைக் கொண்டு சரி செய்ய முடியும். 1. சத்து மாத்திரைகள், 2.வலி நிவாரணிகள், 3. கிருமிக் கொல்லிகள், 4.ஒவ்வாமை மருந்துகள் போன்றவையே போதுமானது. பல சமயம் ஒரே மருந்தே மாத்திரை, ஊசி, டானிக் வடிவத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மருந்து, பல மருந்துக் குழுமங்களால் பல பெயர்களில், பல வடிவங்களில், பல நிறங்களில்,  பல உறைகளில் வருவதால் நிறைய மருந்துகள் உள்ளதெனும் கற்பனையை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, பாராசிட்டமால் என்னும் ஒரே மருந்து கால்பால், பெபானில், மெட்டாசின், குரோசின் என்ற பெயர்களில் வருகிறது. மருத்துவர்கள் எழுதித் தரும் எழுத்துக்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதனால் நிறைய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என மக்களை எண்ண வைக்கிறது. இது தேவையற்றது. மருத்துவத்தில் ஏகப்பட்ட மருந்துகள் இருக்கின்றன என்கிற பொய்மையை மக்கள் நம்பத் தேவையில்லை.
 

5. மருந்துச் செலவு என்பது பல குடும்பங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயமாக உள்ளது. மருந்தைப் பொறுத்தவரையில், மொத்த விலைக்கும் சில்லறை விலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உதாரணமாக, வயிற்றுப் புண்ணைப் போக்கும் omeprazole என்னும் மருந்து, மருந்துக்கடையில் ஒரு மாத்திரையின் விலை நான்கு ரூபாயாக இருக்கிறது. அதுவே, மருத்துவர் ஒருவர் மொத்தமாக வாங்கினால், ஒரு மாத்திரை 70 பைசாவுக்குக் கிடைக்கிறது. இதிலிருந்தே மருந்துக் கடைகள், மருந்து விற்பனை மூலம் எவ்வளவு லாபம் சம்பாதிக்கின்றன என்பது புரியும். பொதுமக்கள்,  தேவையான மருத்துவ அறிவினைப் பெற்றுவிட்டால் தேவையற்ற ஊசிகள், டானிக்குகள், மாத்திரைகள், பரிசோதனைகள் போன்றவைற்றைத் தவிர்க்க முடியும். பண விரயத்தைக் குறைக்க, பிற மருத்துவத் துறைகளில் உள்ள பின்விளைவற்ற மருந்துகளைப் பரிசோதித்து நோயாளிக்கு வழங்கவும் மருத்துவர்கள் முயற்சிக்க வேண்டும். மருந்தில் நடக்கும் மாபெரும் வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டு, இன்றைய மருத்துவர்கள் இதையெல்லாம் பரிசோதித்துப் பார்ப்பார்களா என்பது மிக முக்கியமான கேள்வி.

6. மனிதர்களின் சுகாதாரம் என்பது அவர்கள் நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளோடு மட்டும் தொடர்புடையது அல்ல. உண்மையில் மருந்துகளும் மாத்திரைகளும் உண்மையான சுகாதாரத்திற்கு எதிரிகள். சுற்றுப்புறத்தை பாழடித்துவிட்டு, உலகம் முழுவதையும் ரசாயனக் கலவையில் மிதக்க வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவைகள் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு மருந்து உருட்டித் தரும் வேலையில்தான், இன்றைய மருத்துவ உலகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே, விளைவுகளோடு நடத்தும் பணம் பறிக்கும் யுத்தம்தானே தவிர, விளைவுக்கான காரணங்களை  களைந்து எறியும் உண்மையான மருத்துவ முயற்சி அல்ல.

7. சட்டரீதியான போலி மருத்துவர்களைப் பற்றி இன்று பேசுகின்றனர். மற்ற மாநிலங்களைவிடவும் தலைநகர் டெல்லியில் போலி மருத்துவர்கள் மிக அதிகம். உண்மைக்கு மாறானவற்றைத் தவறு என்று தெரிந்தே கடைபிடிப்பவர்கள் அனைவருமே போலி மருத்துவர்கள்தான். முறையான பட்டங்களை வாங்கிவிட்டு, தேவையில்லாத மருந்து, மாத்திரை, டானிக், ஊசி, பரிசோதனை போன்றவற்றைச் செய்யும் மருத்துவர்களை என்ன பெயர் சூட்டி அழைப்பது?

8. உண்மையான மக்கள் நலன் என்பது ஒவ்வொருவருக்கும் நோயிலிருந்து நீங்கும் அறிவினைக் கொடுப்பதை அங்கீகரித்தும், சுயமாக சிகிச்சை செய்து கொள்வதை அங்கீகரிப்பதிலும்தான் இருக்கிறது. அடிப்படை சுகாதாரத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான உரிமையைக் கொடுத்து, அவற்றுக்கு இடையில் ஒரு சமச்சீரை உருவாக்குவதில்தான் உண்மையான சுகாதாரம் அடங்கியிருக்கிறது என இவான் இலிச் என்ற மருத்துவ அறிஞர் சொல்கிறார். நமது சுகாதாரத்துறை அமைச்சகம் இதைச் செய்வதற்கு முன் வருமா?

9. ' சாதாரண உப்பை உட்கொண்டால் தைராய்டு சுரப்பி நோய்களுக்குக் காரணமாக அமையும்' என்பதால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, ' அயோடின் கலந்த உப்பை மட்டுமே சாப்பிட வேண்டும்' எனக் கூறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சிகரெட், பீடி, சாராயத்தை ஏன் தடை செய்யவில்லை? சொல்லப்போனால் சாதாரண உப்பு ஏற்படுத்தும் பாதிப்பைவிட, இவைகள் உருவாக்கும் நோய்கள் பல மடங்கு அதிகம். சமூகத்தை வதைக்கும் மிக முக்கியமான பிரச்னைகளுக்கு மது மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. இதைப் பற்றி எந்த அரசுகளும் கேள்வி எழுப்புவதில்லை. மக்களின் சுகாதாரத்தைவிடவும், வணிக நோக்கும் அவை கொடுக்கும் லாபங்கள் மட்டுமே அனைத்தையும் தீர்மானிப்பவையாக உள்ளன.

10. மருத்துவர் எனக் குறிப்பிடும் DR என்ற வார்த்தை Daylight robbery என்பது ஆக இருக்காமல், உண்மைப் பொருளான டீச்சர் என்பதைக் குறிப்பதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவத்தின் உண்மையான பலனை எளிய மக்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.

(இன்று உலக மருத்துவர்கள் தினம்)

தொகுப்பு: ஆ.விஜயானந்த்
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close