Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடங்கியது அமர்நாத் ஆன்மிக யாத்திரை!

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் ஆன்மிக யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது.

இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டு தோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சிவபெருமான் பனிலிங்க வடிவில் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த மாதங்களில் குறிப்பிட்ட 48 நாட்களைத் தவிர்த்து, மற்ற நாட்களில் வருடந்தோறும் இக்கோயில் பனியால் மூடப்பட்டே இருக்கும். அதனால், பனி இல்லாத இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே சிவ தரிசனம் கிடைக்கும் என்பதால், பனிலிங்கமாக காட்சி தரும் சிவபெருமானைத் தரிசிக்க இந்தியா மட்டுமின்றி, பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் யாத்திரை செல்வது அதிகரித்துள்ளன. இதனால், பக்தர்களின் வசதிக்காகத் தங்குமிடம், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்பட்டுள்ளன.

யாத்திரையின்போது, கடினமான மலையேற்றம் மற்றும் வானிலை மாற்றங்கள் எனப் பலவகையான இன்னல்களைப் பக்தர்கள் இயல்பாகச் சந்திக்க நேரிடும். அமைதியை தேடிப்போகும் இந்தப் பயணமானது, பஹல்கம் நகரிலிருந்து கடினமான மலையேற்றப் பயணமாக மாறிவிடுகிறது. சற்று கடினமான மலையேற்றமாக இருந்தாலும், சிவனை நெஞ்சில் நிறுத்தி அமர்நாத் குகையை நோக்கிய மலைமேடுகளில் பயணப்படுகையில், அங்குச் சுற்றியிருக்கும் அத்துணை அழகான இயற்கை காட்சிகளும் பக்தர்களின் மனதை வருடிச் செல்ல தவறுவதில்லை.

இந்த ஆன்மிக யாத்திரை ஆண்டுதோறும் ஜம்மு-காஷ்மீர் அரசால் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் முன்னிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் ஆன்மிக யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் இன்று தொடங்கியது. ஜம்முவில் உள்ள பகவதி நகர்யாத்ரா நிவாஸில்லிருந்து, அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க முதல் குழுவாக ஆயிரத்து 282 பேர் 13 பேருந்துகள், 24 மினி பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகத் தீவிரவாத தாக்குதல் அதிகரித்திருப்பதாலும், அமர்நாத் செல்லும் வழியில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாலும், அவர்களுடன் பாதுகாப்பாக துணை ராணுவத்தினர் உடன் சென்றுள்ளனர்.

குறிப்பாக வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஜம்மு பகவதி நகரில் உள்ள அமர்நாத் முகாமில், ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற ஆன்மிக யாத்திரையில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இதனிடையே அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக 2 நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு நேற்று வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இன்று பனிலிங்கமாக காட்சி தரும் சிவபெருமானை தரிசிப்பார் எனக் கூறப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ