Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் இவரா..?



மிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சத்தியமூர்த்திபவன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், அதற்குப் பொறுப்பேற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டியில் அடுத்த தலைவருக்கான போட்டி  சூடு பிடிக்கத் தொடங்கியது.

டெல்லியில் 6 பேர் முகாம்

தலைவர் பதவிக்கான போட்டி அனல் பறக்கும் நிலையில், தமிழ் மாநில காங்கிரசில் இணைந்து, பின் மீண்டும் தாய் கழகமான காங்கிரசுக்கு திரும்பி வந்த பீட்டர் அல்போன்ஸ், பா.ஜ.க. வில் இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்து, அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்த திருநாவுக்கரசர், ராகுல்காந்தியிடம் நெருக்கமாக உள்ள மாணிக்தாகூர், முன்னாள் மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன், டாக்டர் செல்லக்குமார்,  எச்.வசந்தகுமார் ஆகிய 6 பேர் தற்போது களத்தில் உள்ளனர். முக்கியமாக காங்கிரஸ் தலைமையைச் சந்திக்கும் நோக்கில் இவர்கள் பெரும்பாலும் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பீட்டர் அல்போன்ஸ்க்கே அதிக வாய்ப்பு

இவர்களில் பீட்டர் அல்போன்ஸ், இரண்டு முறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், பீட்டர் அல்போன்ஸ்க்கு ஆதரவாக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் டெல்லியிலேயே முகாமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பீட்டர் அல்போன்ஸ் புதிய தலைவராக வருவதற்கு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவாளர்களும், 48 மாவட்டச் செயலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் ஆதரவு இருப்பதால், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நிச்சயம் வருவார் என நம்பப்படுகிறது. பீட்டர் அல்போன்ஸ்சை தலைவராக நியமித்தால், த.மா.கா.வில் இருந்து பலரும் வெளியேறி, காங்கிரஸ் கட்சிக்கே  திரும்புவார்கள் என்றும், அதனால் ஜி.கே.வாசன் கட்சி உடையும் என்றும் சத்தியமூர்த்திபவன் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே ராகுல்காந்தி, தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பி உள்ளதால், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் யார் என்பது இந்த வாரம் இறுதிக்குள் முறைப்படி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ