Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 வயது சிறுமியைச் சிதைத்த கொடூரன்... மேட்டூரில் ஒரு சைக்கோ!


மேட்டூர் அருகே 2-ம் வகுப்பு பயிலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திக் கொலை செய்த வழக்கில், 17-வயது சிறுவன் சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தெலுங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கு, ஜோதிகா (8), தர்ஷினி (6) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் 2-ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி  தர்ஷினியை, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமான முறையில் கொன்றுள்ளான் 17-வயது நிரம்பிய சிறுவன். சிறுவனின் இந்த செயல், சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சனிக்கிழமை மாலை, தர்ஷினி தனது தந்தையுடன் கடைக்குச் சென்று தின்பண்டங்கள் வாங்கி விட்டு, அருகில் உள்ள சரவணன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் வீட்டின் வழியாக வந்திருக்கிறார். ஆனால்  வீடு வந்து சேரவில்லை. இதையடுத்து சிறுமி தர்ஷினியை பல்வேறு இடங்களில் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் தேடினர். இந்நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சரவணனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளார். அப்போது, அவனது வீட்டில் உள்ள ஒரு அறையில் குங்குமம் சிதறிக் கிடந்தது. அத்துடன் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரம் ஒன்றில் சிறுமியின் உடல் மூடி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுமியின் உடலை மீட்ட போலீசார், சிறுவனையும் கைது செய்தனர். 
 
 

சிறுவனின் தாத்தாவுக்கும் தொடர்பு 

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக நம்மிடையே பேசிய கிராம மக்கள், "அந்த சிறுவனுக்கு 18 வயது நிரம்பி விட்டது. அந்தச் சிறுவன் 10-ம் வகுப்பு முடிந்து சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு பள்ளி மாணவர் ஒருவரை, அருகில் உள்ள மலைப்பகுதிக்குச் அழைத்துச் சென்று மாணவரின் உயிர் நிலையையும், நெஞ்சு பகுதியையும் கடித்து பாலியல் தொந்தரவு செய்தான். பாதிக்கப்பட்ட மாணவர் கூச்சலிட்டதால், கிராமத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சரணவனை கண்டித்து ஊருக்குள் நுழையத் தடை விதித்தோம்.

இந்நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த சனிக்கிழமைதான் ஊருக்குள் மீண்டும் வந்துள்ளான். ஊருக்குள் வந்த அன்றே தன்னுடைய வக்கிரப் புத்தியை 6 வயது சிறுமியிடம் காட்டி உள்ளான். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதற்கு, சிறுவனின் தாத்தா ராமனும் முக்கிய உடந்தை. அவரே சிறுமியின் உடலை இரண்டாகப் பிளந்து அருகில் உள்ள நீர்த் தேக்கத்தில் வீச முடிவு செய்தார். ஆனால், போலீசார் சிறுவனின் தாத்தாவை நிரபராதி என வெளியே விட்டுவிட்டு, சிறுவனுக்கு மனநிலை சரியில்லை என வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். சிறுவனின் தாயார் ரூபா, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் ரூபாய் 2 லட்சம் தருவதாகவும், வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படியும் மிரட்டுகிறார். அதனால், சிறுவனின் தாத்தா ராமனையும் கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தி தெலுங்கனூர் கிராம மக்கள் நாங்கள் அனைவரும் கருங்கல்லூரில் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம்" என்றனர்.
 
11 செல்போன்கள் 35 மெமரி கார்ட்

சிறுவனை கைது செய்த போலீசார், அவனது வீடு முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது, அந்தச் சிறுவனிடமிருந்து 11 செல்போன்கள் மற்றும் 35 மெமரி கார்டுகள் ஆகியவற்றையும் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட 35 மெமரி கார்டுகளிலும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

வாக்குமூலத்தில் அதிர்ந்துபோன போலீஸ்
 
மேலும் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களைச் சொல்லி போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளான். விசாரணையில், மிகவும் நெருக்கமான சிலர் தன் கண் எதிரிலேயே பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும், சிறுவயது முதலே அதையே பார்த்து வளர்ந்ததால், தனக்குள்ளும் இப்படியான எண்ணங்கள் தானாகவே தோன்றியதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான். அத்துடன் சில குடும்ப பெண்களிடமே, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தானும் பாலியல் இச்சையில் ஈடுபட்டதையும் அவன் ஒத்துக்கொண்டுள்ளதால் போலீசாரே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். இந்நிலையில் விசாரணைக்குப் பின்னர்  சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சரவணன், சேலம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்கப்பட்டான்.

                                                             
- ரா.வளன்
படங்கள்: எம்.விஜயகுமார்
 

எடிட்டர் சாய்ஸ்