Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் திருப்பம்: கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை சம்மன்



ர்செல்-மேக்சிஸ் வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அது தொடர்பான விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது.

ஏர்செல் நிறுவனத்தில் ரூ.4 ஆயிரம் கோடியை முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் ஒப்புதலைக் கடந்த 2005 ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் கோரியிருந்தது. ஒப்புதல் தர வேண்டிய இந்த வாரியத்துக்கு நிதி அமைச்சராக இருப்பவர்தான் தலைவர். அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் ப. சிதம்பரம். மேக்சிஸ் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக, அவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்பட்டது.

மேக்சிஸ் நிறுவனத்தின் ஒப்புதல் நிலுவையில் இருந்த நிலையில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் திடீரென சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலைக்குக் கைமாறின. அதன் பின் கடந்த 2006 ஆம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனம் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்த நிலையில், இந்தப் பங்குகளும் பெருந்தொகைக்கு விற்பனையாயின. இப்படியாகக் கடைசி நேரத்தில் ஏர்செல் பங்குகள் குறைந்த விலைக்குக் கைமாறியதே ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு என்று அப்போதே சில செய்திகள் கசிந்தன.

தமது மகன் கார்த்தி சிதம்பரம் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகத்தான், மேக்சிஸ் முதலீட்டுக்கு ப.சிதம்பரம் அனுமதி கொடுத்தார் என்றும், அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. இதே புகாரை பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் எழுத்துப் பூர்வமாக அளித்தார்.

இவ்வழக்கின் திடீர் திருப்பமாக, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் ஆதாயமடைந்தது தொடர்பான விசாரணைக்கு வருமாறு கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கப் பிரிவு திடீரென சம்மன் அனுப்பியுள்ளது. இவ்வழக்கில் அமலாக்கப் பிரிவு, கார்த்தி சிதம்பரத்தின் பக்கம் திருப்பி உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ