Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் திடீர் திருப்பம்..! முன் ஜாமீன் கேட்டு மாறன் சகோதரர்கள் மனு


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கிய விவகாரத்தில், அன்னியச் செலாவணி நிதிப் பரிவர்த்தனை முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உட்பட ஆறு பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதுதொடர்பான விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளினால் 2ஜி வழக்கின் ஒரு அங்கமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

தயாநிதிமாறன் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது (2004-2007), ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்குப் பதிலாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் மூலமாகத் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிடிஹெச் நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் வந்ததாகப் புகார் எழுந்தது. இதன் காரணமாக, சன் குழுமத்துக்கு சொந்தமான ரூ.742 கோடி சொத்துகளை முடக்கவும் அமலாக்கப் பிரிவு நடவடிக்கை மேற்கொண்டது. அதன் பின் நடைபெற்ற சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தடை நீங்கியது.

இதனிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது. அப்போது மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 6 பேர் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்த வாதங்களை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் குற்றம்சாட்‌டப்பட்ட 6 பேரும் ஜூலை 11ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

இந்தநிலையில் வழக்கு விசாரணைக்காக தயாநிதிமாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் இன்று காலை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கறிஞர்கள் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 21ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close