Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீர் கலவரத்தில் 25 பேர் உயிரிழப்பு: போலீசார் உள்பட 400 பேர் காயம் !

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான புர்கான் வானி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, காஷ்மீரில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. வன்முறைக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். போலீசார், பாதுகாப்பு படையினர் 100 பேர் உட்பட 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமையன்று, அனந்த்நாக் மாவட்டத்தில் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் கமாண்டர்களில் ஒருவரான புர்கான் வானி கொல்லப்பட்டார். இதையடுத்து தெற்கு காஷ்மீர் முழுவதும் கலவரம் பரவி வருகிறது. ஸ்ரீநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர்  தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஷாயன்போரா பகுதியில்  ஆஷிப் என்ற 13 வயது சிறுவனும் பலியாகியுள்ளான்.   காஷ்மீர் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிகின்றன.

அனந்த்நாக் மாவட்டம், சன்கம் என்ற இடத்தில்  போலீஸ் ஜீப் ஒன்றை ஜீலம் நதியில் போராட்டக்காரர்கள்  தள்ளி விட்டனர்.  ஜீப் டிரைவர் ஆரோஷ் கான் என்பவர் ஜீப்புடன் நதியில் மூழ்கினார். அவரைத் தேடும் பணி நடந்து வருகிறது.  காஷ்மீரில் தொடர்ந்து ரயில் சேவை  ரத்து செய்யப்பட்டுள்ளது. இணையதள சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறக்க தடையில்லை என்றாலும், போராட்டம் காரணமாக விமான நிலையத்துக்கு  பயணிகள் வர முடியாத நிலை காணப்படுகிறது. விமான நிலையத்துக்குள்ளும் ஏராளமான பயணிகள் இருக்கின்றனர்.  காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் செல்ல முடிவு செய்தவர்களும் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் காஷ்மீர் நிலவரம் குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது சோனியா, ''தீவிரவாதம் வேரறுக்கப்பட வேண்டுமென்பதில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம். அதே நேரத்தில்  பாதுகாப்பு படையினரால் சொந்த மக்களே கொல்லப்படுவது குறித்து கவலை அளிக்கிறது" எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப், ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் புர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்டது தனக்கு கடும் அதிர்ச்சி அளித்ததாக கூறியுள்ளார். இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காஷ்மீரில் இந்தியா தொடர்ந்து  அப்பாவி மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி வருகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே கொல்லப்பட் புர்கான் குறித்து, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களில் ஒருவரான  உமர் காலீத்,  தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ,'' புர்ஹான் சுதந்திர மனிதராக வாழ ஆசைப்பட்டார், சுதந்திர மனிதராகவே இறந்தார்'' என கருத்து தெரிவித்திருந்தார். பின்னர் அந்தப் பதிவை  அவர் நீக்கி விட்டார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ