Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீர் கொந்தளிப்பும் மத்திய அரசின் கொள்கையும்!

டந்த வெள்ளிக்கிழமை. பாதுகாப்பு படையினரால் இருபத்தி இரண்டு வயது தீவிரவாதத் தலைவன் புர்ஹன்வானி கொல்லப்பட்டான். அவனது நினைவுக் கூட்டங்களுக்குப் பல்லாயிரம் மக்கள் கூடி பிரார்த்தனை செய்தார்கள். எதிர்ப்பாளர்கள் பாதுகாப்புப் படையினரோடு மோதலில் ஈடுபட்டார்கள். இதில்  பொதுமக்கள்  17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள்,  காஷ்மீரை மீளாத் துயரத்துக்குத் தள்ளியிருக்கின்றன. ஊடகம் தேசபக்தியை முன்னிறுத்திப் பேசுகிறது. சமூகத் தளங்களில் தேசியவாதிகள், 'காஷ்மீரிகள்தான் இத்தகைய சூழலுக்குக் காரணம்' என்று கொதிக்கிறார்கள். இன்னமும் நிலைமை மோசமாகும் என்றே தெரிகிறது.

எப்படி இப்படிப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்தோம் என்கிற வரலாறு நெடிய ஒன்று. 2008-ல் அமர்நாத் யாத்திரை சார்ந்த சர்ச்சையில் துவங்கிய பிரச்னை, 2010-ல் கோடைகாலம் முழுக்க நடந்த போராட்டங்களில் 120 இளைஞர்கள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்படும்வரை சென்றது. நம்முடைய அரசும், பாதுகாப்புப் படைகளும் எப்படிக் காஷ்மீரை கையாண்டன என்பதற்கான நடமாடும் சாட்சியாகத் தற்போதைய சூழல் இருக்கின்றது. அரசுகளின் காஷ்மீருக்கான செயல்திட்டம் என்ன?...

காஷ்மீரை இந்தியாவின் பிரிக்கப் முடியாத பகுதி என்று சூளுரைப்போம். வேறு எந்த மாநிலத்தையும் நடத்தாத வகையில் அதை நடத்துவோம். எதுவுமே பிரச்னை இல்லாதபொழுது அதை உண்டாக்கிவிடுவது. என்கவுன்டர்கள் செய்கிற பாதுகாப்புப் படையினருக்குப் பரிசுப்பணம் அளிப்பது, அதனால் மச்சிலில் 2010 ஏப்ரலில் நடந்தது போன்ற போலி என்கவுன்டர்கள் தொடர்வது.

பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டால் அளவில்லாத வன்முறையைக் கட்டவிழ்ப்பது. பொதுமக்களைக் கட்டுப்படுத்தும் தேர்ச்சியில்லாத துணை ராணுவப்படைகளிடம் அந்தப் பொறுப்பைத் தருவது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்தும் உபகரணங்களை வாங்க குறைவான முதலீடு செய்வது, மூன்று கோடை காலத்துக்குத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகளின் மூலம் மக்களைக் கட்டுப்படுத்திவிட்டு இந்த உபகரணங்களை வாங்குவது. ( அப்பொழுதும் அவற்றைப் பயன்படுத்துவது இல்லை). நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது. ஊடகம் மறக்கும் வரை காத்திருப்பது.

கூடுதல் வன்முறையைப் பற்றிச் சற்றும் சஞ்சலமில்லாமல் எல்லாப் பழியையும் தீவிரப்போக்குக் கொண்ட கிலானி, பரமவைரி பாகிஸ்தான் ஆகியோர் மீது போடுவது. பல்லாயிரம் இளைஞர்களைப் போராட்டங்களுக்குப் பின்னர் கைது செய்வது. பெற்றோர்களைத் தவிக்கவிட்டுப் பொறுமையாக அவர்களை விடுவிப்பது. மக்கள் கூடுவதற்கான உரிமை அளிக்கப்பட்ட கூட்டங்களைத் தொடர்ந்து தடுப்பதன் மூலம் மறுப்பது. மாணவர் அரசியலை தடைசெய்வது, கடவுச்சீட்டுக்களைக் கைப்பற்றிக்கொள்வது. பிரிவினைவாதிகளை வீட்டுக்காவலில் வைப்பது. ஊரடங்கு உத்தரவுகளைத் தொடர்ந்து அமல்படுத்துவது. இணையம், எஸ்எம்எஸ் வசதிகளை அவ்வப்போது நிறுத்துவது. கூட்டங்களை வீடியோ எடுப்பது. முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது.

காஷ்மீரின் எதிர்ப்புக்குரல் அடங்குகிறபொழுது, இந்தியாவின் நீதிபரிபாலனத்தின் நம்பிக்கை மிகுந்த சாட்சியாக இருக்கும் குற்றவாளியை தூக்கில் இட்டு நீதி வழங்குவது. ஆனால், அந்தத் தகவலை அவரின் குடும்பத்துக்குக் கூடத் தெரிவிக்காமல் இருப்பது. துரித அஞ்சல், அலைபேசி அழைப்பை விட வேகமாகப் பயணிக்கும் என்று கருதிக்கொள்வது.

கடந்த காலம் பற்றிய கவனமோ, எதிர்காலம் பற்றிய தொலைநோக்கோ தேவையில்லை. காஷ்மீருக்கு என்று செயல்திட்டம் எதுவும் கைவசம் இருப்பதில்லை. போராட்டங்கள் வெடித்துக்கிளம்பும் பொழுது எதிர்கொண்டுவிட்டு, மீண்டும் தவத்துக்குப் போய்விடுவது. காஷ்மீர், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. வானமே எல்லை. மனித உரிமை மீறல்களைத் துளியும் பொருட்படுத்தமாட்டோம். பிரிவினைவாதிகளோடு பேச்சுவார்த்தை நிகழ்த்த நாங்கள் தயார். பேச்சுவார்த்தைகளின் பொழுது துளியும் சலுகைகள் தராமல் உறுதியாக நிற்பது. இதன்மூலம் மிதவாதிகளையும் அச்சத்துக்குத் தள்ளுவது.

மிதவாத பிரிவினைவாதிகளை,  தீவிரவாதிகளோடு இணைத்து அடையாளம் காண்பது. எந்தச் சிக்கலும் இல்லாத ஒற்றைப்பார்வையை அவர்கள் அனைவர் பற்றியும் வைத்துக்கொள்வது. தனிநாடு கோரி போராடியவர்களுடன் வெளிநாட்டு அரசுகளும், இந்திய அரசுகளும் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகளைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது. நாகா போர்ப்படைகளை, தனி அரசுகளை நடத்த விடுவது, காஷ்மீரிகள் தெருக்களில் இறங்கிப் போராடினாலே சிறையில் தள்ளுவது. அயல்நாட்டு ஊடகங்கள் இவற்றைக் கவனப்படுத்தினால் கதறுவது.

பத்து வருடத்துக்கு ஒருமுறை பிரிவினைவாதிகளைச் சந்திப்பது. அவர்களிடம் கருத்துகள் கேட்பது. செயல்திட்ட கோப்புகளோடு அவர்கள் வரும்பொழுது, முற்றாக அவற்றை நிராகரிப்பது. மிதவாதிகள், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை எதிர்க்கும் கருவிகள் என நம்ப மறுப்பது, பள்ளத்தாக்கின் அமைதிக்கான கொஞ்ச நஞ்ச வாய்ப்புகளையும் கைப்பற்றிக்கொள்ளத் தவறுவது. அவர்களை அரசியல் அங்கமாகக் கருதாமல் அவர்களைக் கவனிக்கும் பொறுப்பை,  கறைபடிந்த அவர்களின் கடந்தகாலம் அறிந்த உளவு ஏஜென்சிகளிடம்  விடுவது. அவை இன்னமும் கடுமையாக நடந்து கொள்ளும்.
அமைதிக்கான அமைப்புகளை உருவாக்குவது.

சமரசத்திற்கு முயற்சிக்க நன்றாக அறியப்பட்டவர்களை மத்தியஸ்தராக நியமிப்பது. காஷ்மீர் சிக்கலில் பங்குடைய அனைவருடனும் பேச அனுமதிப்பது. இந்தியா-ஜம்மு காஷ்மீர் புரிந்துணர்வுக்கான அவர்களின் பரிந்துரைகளை நிராகரிப்பது. சுயாட்சிக்கான வாக்குறுதிகளை அதைச் செய்ய என்னவெல்லாம் தேவை என்று சொல்லாமலே அள்ளிவீசுவது.

எவ்வளவு ராணுவம் காஷ்மீரில் இருக்கிறது என்றோ, அது எவ்வளவு நிலங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பது குறித்தோ எந்த உரையாடலும் நிகழ்த்தக்கூடாது. ஒளிவுமறைவின்மையை விடத் தேசப்பாதுகாப்பு முக்கியம். ஒட்டுமொத்த தீவிரவாதம் தொடர்பான இறப்புகள் 2001-ல் 4,507 பேர் என்பதிலிருந்து 2015-ல் 174-ஆகக் குறைந்தாலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைத் துளியும் மாற்றிக்கொள்ளாமல் இருப்பது.

பாதுகாப்புக்கு எல்லைப்பகுதியில் ஈடுபட்டிருக்கும் படைகளையும், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் படைகளையும் வேறுபடுத்தவோ, சூழலுக்கு ஏற்ப கூட்டுவதோ, குறைப்பதோ கூடவே கூடாது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) குறித்துச் சிறப்பு விவாதம் நடத்தி, இரண்டு மாவட்டங்களில்  அதை நீக்க முதலமைச்சர்களை ஊக்குவிப்பது. எல்லாம் கைக்கூடி வருகையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் அழுத்தத்துக்கு அடிபணிவது. வேறெங்கோ எடுக்கப்படும் முடிவுகளுக்கான எல்லாப் பொறுப்பையும் தலையில் தாங்கிக்கொள்ளும் ஒரு முதலமைச்சரை வைத்துக்கொள்வது.

மைய நீரோட்டத்தில் இருக்கும் கட்சிகள் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைப்பது. அடக்குமுறைகள், ஊரடங்கு உத்தரவுகள் கடந்து செல்லும்போது அவை நல்ல நடவடிக்கை என வரலாற்றில் வரிசைப்படுத்துவது. பல வருடங்களாகக் காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து உண்மையில் இல்லை என்பதை வசதியாக மறந்துவிட்டு, சட்டப்பிரிவு 370 குறித்து விவாதம் தேவை என்று எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது குரல் கொடுப்பது. பல்லாயிரம் காஷ்மீரிகள் கொல்லப்படும் பொழுது கண்டுகொள்ளக்கூடாது. வாஜ்பேயின் பெயரை மட்டும் பெயரளவுக்கு நினைவுக்கூர்வது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம், அங்கே தேர்தல் அரசியல் முன்னோக்கி நகர்வதோ, அரசு செயல்படுவதோ, மாற்றம் பூப்பதோ தேவையில்லை.

சொல்கிற கதையைக் கவனமாகச் சொல்வது. பாகிஸ்தானின் சுதந்திர சிந்தனையாளர்கள் சீர்கெட்ட அரசை விமர்சிக்கையில் கொண்டாடி தீர்ப்பது. நம்முடைய பத்திரிகையாளர்கள் காஷ்மீர் தீவிரவாதம் பற்றி மட்டுமே பேச வேண்டும், காஷ்மீரிகளுக்கு நடக்கும் அநீதிகளைப் பற்றி பேசக்கூடாது. தன்னுடைய அழகைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் நடிகையைப் போல, காஷ்மீர் பற்றி சராசரி குடிமகன் பெருமிதப்பட வேண்டும். காஷ்மீரிகள் வேறு யாரைவிடவும் அதிகம் அல்லல்படுகிறார்கள் எனச் சொல்வது பிரிவினைவாதம்.

அதிகரிக்கும் மசூதிகள் மற்றும் தீவிரவாத வளர்ச்சியில் மட்டும் கவனம். இந்தியாவின் பணக்காரர்களிடம் காஷ்மீரிகள் பற்றித் தீரா அச்சத்தை விதைப்பது. காஷ்மீரின் சூஃபி வழி இஸ்லாமை வகாபியமும், அரசியல் மயப்படுத்தபட்ட இஸ்லாமும் சீரழிக்கின்றன என்று சொல்லிவிட்டு, அரசுக்கு அதில் இருக்கும் பங்கை கவனமாகக் கடந்துவிடுவது.

சுருக்கமாக, வெளிநாட்டு சக்திகள், நாசகார ஆட்கள் மீது பழியைப்போடுவது. நம்முடைய கண்ணியம், அமைப்புமுறை, ஜனநாயக நடைமுறைகளில் உள்ள நம்பிக்கைக்கான திறப்புகளை அடைத்துவிடுவது. காஷ்மீரின் பதற்றமான அரசியல் களத்தோடு மல்லுக்கட்ட வேண்டாம். லஷ்கர் -இ-தொய்பா, ஹிஜ்புல் முஜாஹிதீன், ஐஎஸ்ஐ ஆகியவை வந்து உங்களுக்காக சிக்கலை எளிமையாக்கும்.

மீண்டும் முதலில் சொன்னதில் இருந்து தொடங்குவது. சுபம்!


- சுஷில் ஆரோன் (இணையாசிரியர், ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
நன்றி:
ஹிந்துஸ்தான் டைம்ஸ்

- தமிழில்: மோ. தருண்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close