Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலக்கரி ஊழல் வழக்கு: 'ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது!'

புதுடெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், அப்போதைய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்துப் பேசிய விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விசாரணையை மாற்றும் முயற்சி நடந்தற்கான முகாந்திரம் இருப்பதாக எம்.எல்.சர்மா தலைமை யிலான நீதிமன்றக்குழு கூறியுள்ளது.

சிபிஐ இயக்குநராக ரஞ்சித் சின்ஹா பதவி வகித்தபோது, நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை தனது அரசு பங்களாவில் சந்தித்தாக புகார் எழுந்தது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் இப்புகாரை எழுப்பினார். இதற்கு ஆதாரமாக, ரஞ்சித் சின்ஹா வீட்டின் வருகையாளர் பதிவேட்டை அவர் நீதிமன்றத்தில் அளித்தார்.

முக்கிய ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை ரஞ்சித் சின்ஹா சந்தித்ததன் மூலம் அவ்வழக்கு விசாரணையில் சமரசம் செய்துகொண்டதாக பிரசாந்த் பூஷன் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து ரஞ்சித் சின்ஹா மீதான புகாரை விசாரிக்க, சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இக்குழு தனது முதல்கட்ட அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.

“நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிலர், ரஞ்சித் சின்ஹாவை சந்தித்து பேசியுள்ளது உறுதியாகியுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக விசாரணையை மாற்றும் முயற்சி நடந்தற்கான முகாந்திரம் உள்ளது" என எம்.எல்.சர்மா தலைமையிலான குழு கூறியுள்ளதை,  நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி தெரிவித்தார்.

ரஞ்சித் சின்ஹா  வீட்டின் வருகையாளர் பதிவேடு உண்மையானதே என்று இக்குழு கூறியுள்ளதை அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.  இருப்பினும் வருகையாளர் பதிவேடு உண்மையானது என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இவ்வழக்கை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்தக் குழுவின் அறிக்கை பற்றி  பேசிய ரஞ்சித் சின்ஹாவின் வழக்கறிஞர் விகாஸ் சிங், “வருகையாளர் பதிவேட்டில் உள்ள விவரங்கள் போலியானவை. இதன்படி சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் நாட்களில் பல நாட்கள் ரஞ்சித் சின்ஹா டெல்லியில் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

இருதரப்பு வாதங்களை கேட்டபின்,  சர்மா அறிக்கையின் மீதான நடவடிக்கை குறித்து தனது முடிவை பின்னர் அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ