Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மரத்தடியில் குழுவாக அமர்ந்து 'பிட்' அடித்த ஜார்க்கண்ட் மாணவர்கள்! - அதிர்ச்சி சம்பவம்

தன்பாத்: பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும், மரத்தடியில் குழுவாக அமர்ந்து மாணவர்கள் 'காப்பி' அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகாரில் மாநில 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவர்கள் சிலர் 'காப்பியடித்து' முதலிடம் பிடித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பீகார் மாணவர்கள் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வந்து படிக்கலாம் என்று அம்மாநில முதல்வர் ரகுவர்தாஸ் அழைப்பு விடுத்து இருந்தார்.

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 'காப்பியடித்த' சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம் கோவிந்தபூரில் உள்ள ஆர்.எஸ்.மோர் பள்ளியில் கடந்த 9-ம் தேதி பிளஸ்-1 தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வு, அந்தப் பள்ளியில் உள்ள மரத்தடியில் நடத்தப்பட்டு இருக்கிறது. அப்போது, மாணவர்கள் குழு குழுவாக அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதனைப் பயன்படுத்தி மாணவர்கள், ஒருவருக்கொருவர் காப்பியடித்துத் தேர்வு எழுதி இருக்கின்றனர். இதில் சில மாணவர்கள் பாடப்புத்தகங்களைப் பார்த்தும் தேர்வு எழுதி இருக்கின்றனர். சிலர் வகுப்பறைகளில் அமர்ந்து தேர்வு எழுதி இருக்கின்றனர். அவர்களும் மேஜையில் அருகருகே அமர்ந்தபடி ஒருவரைப் பார்த்து மற்றொருவர் ' காப்பி 'அடித்து தேர்வு எழுதி இருக்கின்றனர்.

இதன் உச்சமாக, ஒரு மாணவருக்குப் பதிலாக அவரது தந்தையே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த தேர்வு முறைகேடுகள் பற்றிய செய்தி ஊடகங்களில் வெளியாகி அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முறைகேடு நடந்த பள்ளி வினோபாவே பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது என்பதால் அதன் துணைவேந்தர் குர்தீப்சிங், இந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தேர்வு மைய கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு மைய கண்காணிப்பாளர் கிரன்சிங் அளித்துள்ள விளக்கத்தில், ''தேர்வு மையத்தில் அனைத்து மாணவர்களும் தூரம் தூரமாக அமர்ந்து தேர்வு எழுத போதிய அறைகள் இல்லை. அதனால், மாணவர்கள் அனைவரும் அருகருகே அமர வைக்கப்பட்டு தேர்வு எழுதினர்" என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில அகாடமி கவுன்சில் துணைத் தலைவர் புல்சிங் கூறும்போது, ''ஊடகங்கள் மூலமே இந்த முறைகேடு எங்கள் கவனத்துக்கு வந்தது. தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்து உள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ