Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

180 கி.மீ வேகத்தை எட்டியது டால்கோ: கதிமான் ரயிலின் வேகத்தை முறியடித்தது!

ஸ்பெயினில் இருந்து வரழைக்கப்பட்ட டால்கோ மாடல் ரயில் பெட்டிகளை வைத்து, இந்தியன் ரயில்வே பரிசோதித்து வருகிறது. முதல்கட்ட பரிசோதனையில் 120 கி.மீ வேகத்தை டால்கோ எட்டியது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் இருந்து 9 பெட்டிகள் கொண்ட டால்கோ ரயில், 2வது கட்டமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. மதுரா முதல் பால்வால் வரை 2வது கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த இரு நகரங்களுக்கிடையேயான 84 கிலோ மீட்டர் தொலைவை, வெறும் 38 நிமிடங்களில் டால்கோ கடந்து சாதனை படைத்தது. இந்த தொலைவை கடக்க வழக்கமாக 90 நிமிடங்கள் ஆகும். அது மட்டுமல்லாமல் டால்கோ ரயில், தனது முழுவேகமான 180 கிலோமீட்டர் வேகத்தையும் எட்டியது. புட்டேஷ்வர் மற்றும் ரந்தி ரயில் நிலையங்களுக்கிடையே டால்கோ அதிகபட்ச வேகத்தை எட்டியபோது, ரயில்வே அதிகாரிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

தற்போது காலி கோச்சுகளுடன்தான் டால்கோ பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அடுத்த பரிசோதனையில் மனிதர்களை அனைத்து கோச்சுகளிலும் அமர வைத்து  பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  டால்கோ என்பது இலகுரக பெட்டிகளைக் கொண்டது. ஆனால் இந்திய தயாரிப்பு  என்ஜின் பொருத்தப்பட்டுதான் இயக்கப்படும். நேற்றைய பரிசோதனையின் போது 4,500 குதிரைத்திறன் கொண்ட இந்திய என்ஜின்தான் டால்கோவை இயக்கியது.

இதுகுறித்து வடமத்திய ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் திலீப்குமார் சிங் கூறுகையில்,'' இந்திய ரயில்பாதைகளில் அதிவேக ரயில்களை இயக்கி பார்ப்பது சவால் நிறைந்தது. டால்கோ ரயில் 180 கி.மீ வேகத்தை எட்டியது. மிகப் பெரிய சாதனை ''என்றார்.

வரும் ஜூலை 31ம் தேதிக்குள் 20 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அடுத்து  1,400 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட டெல்லி - மும்பை இடையே டால்கோ ரயில் பரிசோதித்து பார்க்கப்படவுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை டெல்லி - ஆக்ரா நகரங்களுக்கிடையே ஓடும் கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில்தான் அதிகபட்சமாக  160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தற்போது அதனை முறியடித்துள்ளது டால்கோ.

 

Save

Save

எடிட்டர் சாய்ஸ்

MUST READ