Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது... சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்!

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் சரக்கு, சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதா, பினாமி சொத்து பரிவர்த்தனைத் தடை மசோதா உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

நாடாளுமன்றத்தின் கடந்த சில கூட்டத் தொடர்களில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்னைகளில் மோதல் போக்கு நிலவியது. குறிப்பாக டெல்லி மேல்–சபையில் ஆளும்கட்சிக்கு போதிய பலம் இல்லாததால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறிய (ஜி.எஸ்.டி.) சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மேல்–சபையில் மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

காஷ்மீரில் பெரிய அளவில் வன்முறை சம்பவங்களும், அருணாச்சல பிரதேசத்தில் ஆட்சி மாற்றமும் நடைபெற்றுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12–ம் தேதி வரை மொத்தம் 20 அமர்வுகளாக நடைபெற உள்ளது.

இந்த கூட்டத் தொடரில், ஜி.எஸ்.டி. மசோதாவை டெல்லி மேல்–சபையில் நிறைவேற்றிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது. கடந்த ஆண்டு இன்னொரு முக்கிய சட்ட திருத்த மசோதாவான ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் இன்னும் முழுமை அடையாத நிலையில் உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும் இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இதேபோல் நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், பினாமி சொத்துகள் பரிமாற்ற தடை சட்டம் ஆகிய 2 முக்கிய மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. இரு அவைகளிலும் மொத்தம் 50–க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, செய்தி ஒலிபரப்பு அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தலைவர்கள் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள்.

அப்போது, ஜி.எஸ்.டி. மசோதாவில் உள்ள சில முக்கிய பிரிவுகளில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் கொண்டுள்ள கருத்துவேறுபாடுகளை களைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதே நேரம் இந்த மசோதா தொடர்பாக காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட சில கட்சிகள் தற்போது பின்வாங்கி இருப்பதால் டெல்லி மேல்–சபையில் ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்றிவிட முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

இந்த மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் அதே நேரத்தில், சமீபத்தில் காஷ்மீரில் வெடித்த வன்முறை, அருணாச்சல பிரதேச அரசியல் நிலவரம் குறித்த பிரச்னைகளை காங்கிரஸ் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வு, விவசாயிகள் பிரச்னை, வடமாநிலங்களில் வெள்ளம், வெளிநாட்டு கொள்கைகளில் தோல்வி நிலை ஆகியவை குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப உள்ளன.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பான பரிந்துரை குறித்து சட்ட கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்யும்படி மோடி அரசு கேட்டுக்கொண்டு இருப்பது நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு சார்பில் நாடாளுமன்ற விவகார அமைச்சர் அனந்த குமார் ஏற்பாடு செய்திருந்தார். இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி உள்பட 30 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சில தலைவர்கள், அருணாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநில அரசு விவகாரங்களில் மத்திய அரசு கையாண்ட அணுகுமுறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ''ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் அமைப்பு பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து மூண்ட வன்முறைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவித்தன. காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ஒரே குரலில் பேசிய அனைத்து கட்சிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் பிரதிநிதியாகவும், கட்சியின் பிரதிநிதியாகவும் இருக்கும் நாம், நாட்டின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். ஜிஎஸ்டி மசோதாவை அறிமுகம் செய்தது யார் என உரிமை கொண்டாடுவது முக்கியமல்ல.

அந்த மசோதவை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள்தான் முக்கியம்.. அதனால், ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறுவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில் இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. தேச நலனைவிட வேறு எதுவும் பெரியது அல்ல என்பதை மனதில் கொண்டு இந்த மசோதாவை நிறைவேற்ற உதவ வேண்டும்.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதால் இது தொடர்பான விவாதங்கள் அர்த்தம் உள்ளதாகவும், ஆக்கப்பூர்வமான முடிவுகளை அளிப்பதாகவும் இருக்கவேண்டும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close