Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாலாற்றில் தடுப்பணை உயரத்தை அதிகரிக்க தமிழக அரசு எதிர்ப்பு! - வழக்குப் பதிவு

புதுடெல்லி: பாலாறு தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு அதிகரிக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாற்றின் குறுக்கே தமிழக எல்லையையொட்டி பெரும்பள்ளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையின் உயரம் 5 அடியாக இருந்தது. கூடுதல் தண்ணீரை தேக்கி வைக்கும் நோக்கத்தில் அந்தத் தடுப்பணையின் உயரத்தை ஆந்திர அரசு 12 அடியாக உயர்த்தி கட்டி இருக்கிறது. இந்தப் பணி முடியும் நிலையில் உள்ளது. அங்கு 12 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால், தமிழ்நாட்டில் பாலாறு தண்ணீர் இன்றி முற்றிலுமாக வறண்டுவிடும்  நிலை ஏற்பட்டுவிடும்.

இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்து உள்ளது.  தமிழக அரசின் சார்பில், அரசு வழக்கறிஞர் பாலாஜி இது தொடர்பான மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''தமிழகத்தில் 4.20 லட்சம் ஏக்கர் நிலத்தில் நடக்கும் வேளாண்மைக்குப் பாலாறு உதவிகரமாக உள்ளது. தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், பாசனத்துக்காக இந்த ஆற்றையே நம்பி உள்ளனர். மேலும் வட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நகரங்கள், கிராமங்களின் குடிநீருக்கான மிகப்பெரிய ஆதாரமாகவும் பாலாறுதான் உள்ளது. கல்பாக்கம் அணு மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நீர், பாலாறு மூலம்தான் பெறப்படுகிறது.

இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியான இந்தப் பாலாறு, 1892 ஆம் ஆண்டில் அப்போதைய மெட்ராஸ் அரசாங்கத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ‘ஏ’ பிரிவு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறுகளில் ஒன்றாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் 2-ம் பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நீர்த் தேக்கங்களின் பரப்பளவையோ, உயரத்தையோ அதிகரிக்கக்கூடாது. பாசன வசதியையும் அதிகரிக்கக்கூடாது, ஆற்று பாசனத்தின் கடைக் கோடியில் உள்ள மாநிலத்தின் அனுமதி இன்றி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதோ, தண்ணீரைத் திருப்பி விடுவதோ கூடாது.

இந்த ஒப்பந்தத்தை மீறி, பாலாற்றிலோ அல்லது அதன் உப நதிகளின் குறுக்கிலோ  எந்த இடத்திலும், நதியின் ஓட்டத்தை திருப்பும் வகையில் கட்டுமானத்தையோ, வேறு பணிகளையோ மேற்கொள்ள  கூடாது என கோரி ஆந்திர அரசு மீது கடந்த 10-2-2006 ஆம் தேதியில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே வழக்கு தாக்கல் செய்து உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மெட்ராஸ் அரசாங்கத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையேயான ஒப்பந்தத்தை மீறி சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள அணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது

தமிழக அரசைக் கலந்து ஆலோசிக்காமல் ஒருதலைப்பட்சமாக ஆந்திர அரசு எடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. எனவே, அந்த அணையின் உயரம் பழைய நிலையில் இருக்கவேண்டும் என்பதையும், கூடுதல் நீரைத் தேக்கக்கூடாது என்பதையும் உறுதி செய்வதோடு, தமிழகத்துக்கு வரும் இயல்பான நீரோட்டத்தை உறுதி செய்யும் வகையில், தடுப்பணையின் உயரத்தை எந்த நிலையிலும் அதிகரிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு, பாசனப் பகுதிகளில் பாதிப்பு உட்பட பல விளைவுகள் ஏற்படுவதை அரசியல் தலைவர்கள் சுட்டிக் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆந்திர அரசு  உடனடியாகக் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1-ம் தேதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்குக் கடிதம் எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாலாற்றின் தடுப்பணை உயரத்தைக் அதிகரிப்பது தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (திங்கள்கிழமை) முக்கிய பிரச்னைகளை பதிவு செய்யும் சிறப்பு கவன ஈர்ப்பு நேரத்தில் அதிமுக உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் பேசினார். அப்போது அவர்,'தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் குறுக்கிட்டு, பாலாறு பயன்பாட்டில் தமிழக மக்களின் நலனைக் காக்க வேண்டும்' என  வலியுறுத்தினார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ