Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'அப்துல்கலாம் நினைவிடத்தில் வெண்கல சிலையைத் திறந்து வைக்கிறார் மோடி!'

புதுடெல்லி:  முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில், இம்மாதம் 27–ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைப்பதுடன், அப்துல்கலாமின் 7 அடி உயர வெண்கல சிலையையும்  திறந்து வைக்க உள்ளார்.

இந்திய அணுசக்தி விஞ்ஞானியான அப்துல்கலாம், ஏவுகணை மனிதர் என்றும் போற்றப்படுபவர். கடந்த ஆண்டு (2015) ஜூலை 27–ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகரில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்தது.

கலாமின் உடல், அவர் பிறந்த பூமியான ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சி மடம் அருகேயுள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கெனவே அறிவித்து இருந்தார். அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அறிவு சார் மையம், அருங்காட்சியகம், மணிமண்டபம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்காக முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.60 கோடி ஒதுக்கி உள்ளது.

கலாம் மரணம் அடைந்து வருகின்ற 27–ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு அடைகிறது. இந்த நிலையில் அப்துல் கலாமிற்கு நினைவிடம் அமைப்பது தொடர்பாக டெல்லி மேல்–சபையில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் பேசும்போது, ''அப்துல் கலாம் தலைசிறந்த ஓர் ஆசிரியர். நமது  குருக்களில் ஒருவர். ராமேசுவரத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு அடுத்த வாரத்துடன் ஓராண்டு நிறைவு ஆகிறது.

ஆனாலும் அந்த இடம் வெறும் கூரையுடன் காட்சி அளிக்கிறது. அந்தப் பகுதி எங்கும் நாய்கள் அசுத்தம் செய்கின்றன. இது, நமது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடமன்றி வேறெதுவும் இல்லை. அப்துல் கலாம் நினைவிடம் அமைப்பது தாமதமாகி வருவது தொடர்பாக மத்திய அரசையோ, மாநில அரசையோ நான் குறை கூறவில்லை. நினைவிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றுதான் கூறுகிறேன்" என்றார்.

இதற்குப் பதில் அளித்து ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசும்போது, ''மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசுக்கு 5 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. ஆனாலும், தற்போதைக்கு 1.8 ஏக்கர் நிலம்தான் கிடைத்து இருக்கிறது. நமது முயற்சிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் 27–ம் தேதி நாட்டப்படும் என்று ஏற்கெனவே அறிவித்து இருக்கிறோம்.

தற்போது எங்களிடம் உள்ள நிலத்தை வைத்து நினைவகத்தைக் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி திட்டமிட்டபடி வருகின்ற 27–ம் தேதி தொடங்கப்படும். நினைவிடம் அமைப்பதற்கான வரைபடம் இறுதி செய்யப்பட்டு விட்டது. அதனால், கூடுதல் இடத்திற்காகக் காத்திருக்காமல், அன்றைய தினத்திலேயே நினைவிடம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்படும்" என்றார்.

அதன்படி, வருகின்ற 27–ம் தேதி மத்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பில் அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் 7 அடி உயரத்தில் அவருடைய முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட உள்ளது. இந்தச் சிலை ஹைதராபாத்தில் தற்போது தயாராகி வருகிறது. இந்தச் சிலையை நிறுவுவதற்காக 4 அடி உயரத்தில் பீடம் அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

அப்துல் கலாமிற்கு நினைவிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அப்போது அவர், அப்துல் கலாமின் வெண்கல சிலையைத் திறந்து வைப்பார். மேலும் அன்றே பிரதமர், கலாம் மணிமண்டபம், அறிவுசார் மையம், அருங்காட்சியகம் ஆகியவற்றைக்  கட்டுவதற்கான அடிக்கல்லையும் நாட்டுவார். இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள்.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் இந்திய-இலங்கை இடையேயான நட்புறவை பலப்படுத்தும் வகையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள நூலகத்தில் அப்துல்கலாமின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ