Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெயலலிதா, கருணாநிதி கவலைப்பட தேவையில்லை..!'- வள்ளுவருக்கு ஆதரவாக உத்தரகாண்ட் முதல்வர்


திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் கவலைப்படத் தேவையில்லை. நாங்களும் அது குறித்து அக்கறை கொண்டுள்ளோம் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் புகழ்பாடி வரும் பா.ஜ.க., எம்.பி. தருண் விஜய், தமிழகத்தில் தயாரான 12 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலையை, தமிழகத்தின் எல்லா ஊர்களுக்கும் ஊர்வலமாக கொண்டு சென்று, உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கங்கைக்கரை ஓரம் நிறுவ முயன்றார். ஆனால் அங்குள்ள சில மதவாத அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே,  இப்போது திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில், பிளாஸ்டிக் துணியில் மூடப்பட்டு கேட்பாரற்று பரிதாபமாகக் கிடக்கிறது.

இதனிடையே, திருவள்ளூவர் சிலை விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதினார். அதில், உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் இன்று அளித்த பேட்டியில், " திருவள்ளுவர் சிலை ஹரித்துவாரில் அமைக்கப்படும் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அந்த சிலை எங்கள் மக்களுக்கு ஊக்கமளிக்கும். நான் பொறுப்பேற்க முடியாத மற்றவர்களின் செய்கைகளால் ஏற்பட்டுள்ள தவறுகளை சரி செய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டியது எனது கடமை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த மொத்த பிரச்னையும் மரியாதைக்குரிய முறையில் தீர்க்கப்படும். ஹர் கீ பவுரி பகுதியின் பாரம்பர்யம் குறித்து தருண் விஜய் அறிந்திருக்கவில்லை. அதனால்தான் திருவள்ளுவர் சிலையை அங்கு நிறுவ அவராகவே முடிவு செய்திருக்கிறார். அந்த பகுதியில் கடவுள் சிலைகள் மட்டுமே அமைக்கப்படும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். எனவேதான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் திருவள்ளுவருக்கு பெரும் மதிப்பு உள்ளது. இந்த திட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர், சிலையை எங்கு நிறுவன வேண்டும் என்பதை இறுதி செய்யவில்லை. அதனால்தான் குழப்பம் ஏற்பட்டு சில பிரச்னைகள் ஏற்பட்டு விட்டன. உள்ளூர் மக்களின் உணர்வுகளும், திருவள்ளுவரின் பற்றாளர்களின் உணர்வுகளும் புண்படுத்தக்கூடாது. நாங்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதிக்கிறோம். அதை நான் உறுதி செய்வேன். தவறுகளை திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது ஒரு முதலமைச்சரின் கடமை. திருவள்ளுவரின் சிலையை நிறுவுவதற்கு மரியாதையான, பொருத்தமான இடத்தை இறுதி செய்யும் படி ஃபர்துவா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். திமுக தலைவர் கருணாநிதியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திருவள்ளுவர் சிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை. நாங்களும் அதை குறித்த அதே அளவு அக்கறை கொண்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ