Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரில் வன்முறையை தூண்ட வேண்டாம்... பாகிஸ்தானை எச்சரிக்கும் ராஜ்நாத் சிங்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் இளைஞர்களை வன்முறைப் பாதைக்குத் தூண்டி விடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் பர்ஹான் வானியை, அண்மையில் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. பர்ஹான் வானியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவங்களால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்துள்ளது.

இந்த வன்முறையில் சுமார் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர், மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பயங்கரவாதி பர்ஹான் வானியின் ஆதரவாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அதிர்ச்சி தெரிவித்தது, இந்தியாவில் பல விமர்சனங்களை எழுப்பி, பாகிஸ்தானின் ஆதரவுடன்தான் இத்தகைய வன்முறைகள் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த உயர் நிலைக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இரண்டு நாள் பயணமாக காஷ்மீருக்குச் சென்றுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி, அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் அதில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ''காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதங்களைக் கையில் எடுத்து வன்முறையில் இறங்குவதற்கு பின்னால் தூண்டுகோலாக இருக்க வேண்டாம் என்று அண்டை நாட்டிடம் (பாகிஸ்தான்) தெரிவிக்க விரும்புகிறேன்.

காஷ்மீர் இளைஞர்கள் வன்முறைக்குப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். கல்வீச்சு போன்ற விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட வேண்டாம். அதேபோல் போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாதுகாப்புப் படையினர் தவிர்க்க வேண்டும்


பயங்கரவாதத் தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு பாகிஸ்தான். எனவே, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பது சரியான நடவடிக்கை அல்ல என்பதை அந்த நாடு புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்துக்கும் மேலாக, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நபர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு உணர்வுரீதியாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம், மாறாக கட்டாயத்தின் பேரில் அந்த உறவு நீடிக்கக் கூடாது.

மாநிலத்தில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். காஷ்மீர் மக்களுக்கு இருக்கும் மனக் குறைகளைத் தீர்க்க எவருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது" என்றார்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ