Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆம் ஆத்மியை வீழ்த்த நான் கொல்லப்படலாம்! - கெஜ்ரிவால்

புதுடெல்லி: ஆம் ஆத்மியை வீழ்த்த நான் கொல்லப்படலாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக கெஜ்ரிவால் பேசிய 10 நிமிட வீடியோ, இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ''பிரதமர் மோடியின் நிலையற்ற வெளியுறவுக் கொள்கைகளால், பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடான இந்தியாவின் உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் சீர்கெட்டுள்ளது.

டெல்லி மக்களின் நலனுக்காக ஆம் ஆத்மி அரசு மேற்கொள்ளும் பணிகளை மோடியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ டெல்லி பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியையும் அவர் இன்னும் மறக்கவில்லை என்கின்றனர். இன்னும் சிலர், அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறும் பஞ்சாப், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு பெருகி வரும் ஆதரவை மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர்.

ஆட்சிக் கட்டிலில் அமர இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று, நம்மைபோல சமூக பணியாற்றி, மக்களின் ஆதரவோடு ஆட்சியை பிடிப்பது. மற்றொன்று, எதிர்க்கட்சிகளை எப்படியாவது ஒழித்துகட்டிவிட்டு ஆட்சியில் அமர்வது. அதைத் தான், பா.ஜ.க. செய்து கொண்டிருக்கிறது.


ஆம் ஆத்மியின் தொண்டர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என அனைவரிடமும் நான் சொல்ல விரும்புவது, நாம் இப்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தான். எதிர் வரும் நாட்களில் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும்.

நாட்டின் பிரதமர், கோபத்தின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ளத் தொடங்கினால் அது நாட்டுக்கே ஆபத்தாக முடிந்துவிடும். ஆம் ஆத்மிக்கு எதிராக கோபத்தில் முடிவுகளை எடுக்கும் பிரதமர், அதேபோன்றுதான் பிற விவகாரங்களில் முடிவுகளை எடுத்திருப்பார். இதனால், நமது நாடு பாதுகாப்பான நபரின் கரங்களில் தான் இருக்கிறதா? என்ற கேள்வியெழுகிறது.

ஆம் ஆத்மியை நசுக்க வேண்டும் என்பதற்காக சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதற்கு மூளையாக இருப்பவர் மோடிதான். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை 10 எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர இரட்டை பதவி வகிப்பதாக பொய் குற்றச்சாட்டை கூறி, 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கவும் முயற்சி நடக்கிறது.

ஆம் ஆத்மி அரசை முடக்க வேண்டும் என்பதற்காக டெல்லி லஞ்ச ஒழிப்புத் துறை, சி.பி.ஐ., காவல்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், நமது துணிவை அசைக்க முடியவில்லை. நாம் வளைந்து கொடுக்கவில்லை. இதனால், பிரதமர் மோடி கடும் விரக்தியில் இருக்கிறார். அவர் அடுத்து என்ன செய்வார் எனத் தெரியாது.

ஆம் ஆத்மியை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக அவர் (பிரதமர் மோடி) எந்த எல்லைக்கும் செல்வார். நாம் கொலை செய்யப்படலாம். நான் கூட கொல்லப்படலாம். அதனால், எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் மட்டும், எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள். எதையும் தாங்கும் வலு இல்லாதவர்கள், விலகி சென்றுவிடுங்கள்" என்று கூறி உள்ளார்.

பா.ஜ.க. பதிலடி...

இது தொடர்பாக பா.ஜ.க. தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, செய்தியாளர்களிடம் கூறும்போது, ''பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள், கண்டிக்கத்தக்கவை. வெட்ககேடான கருத்துக்களை அவர் கூறி உள்ளார். ஊழலுக்கு எதிராகவும், நன்னடத்தைகள் குறித்தும் பேசும் அவர், பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட தனது கட்சித் தலைவர்களுக்கு ஆதரவாக நிற்பது ஏன்?

சட்ட விதிகளை மீறுவோர் யாராக இருந்ததாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். பிரதமரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்" என்றார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close