Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம்! - வாகனங்கள் அனைத்து எல்லையில் நிறுத்தம்!

பெங்களூரு: மகதாயி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.

கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களில் ஓடும் மகதாயி நதிநீர்ப் பங்கீடு பிரச்னை தொடர்பான வழக்குகள், நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெலகாவி, தார்வார், கதக், பாகல்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்தது.

இதற்காக மகதாயி நதியில் இருந்து கலசா-பண்டூரி கால்வாய்த் திட்டம் மூலம் மல்லபிரபா நதிக்கு 7.56 டி.எம்.சி. தண்ணீர் கொண்டு வர அனுமதி வழங்க கோரி நடுவர் மன்றத்தில் கர்நாடக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை நடுவர் மன்றம் நிராகரித்து கடந்த 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைக் கண்டித்து வட கர்நாடகத்தில் குறிப்பாக கதக், தார்வார், பெலகாவி உள்ளிட்ட மாவட்டங்களில் பொது மக்கள் தீவிர போராட்டம் நடத்தினர். அங்கு அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன. நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு ஒட்டுமொத்த கர்நாடக மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வாட்டாள் நாகராஜ், மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பைக் கண்டித்து கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு பல்வேறு கன்னட சங்கங்கள், கன்னட திரைப்பட வர்த்தக சபை, அரசு ஊழியர் சங்கங்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், வாடகைக் கார்கள் ஓட்டுனர் சங்கம், தனியார் பள்ளிகள் சங்கம் உள்பட நூற்றுக்கணக்கான சங்கங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளன.

பெங்களூருவிலும் இன்று அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் ஓடாது. ஹோட்டல்கள், திரையரங்குகள் மூடப்படும். சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால், தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறும்போது, ''அமைதியான வழியில் போராட்டம் நடத்த வேண்டும். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

போராட்டம் தீவிரமாக உள்ள வட கர்நாடக பகுதியில் போலீசாருடன் அதிவிரைவுப்படை வீரர்கள், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார் தங்க வயல் உள்ளிட்ட கர்நாடகத்தின் எல்லை மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழக அரசு விரைவுப் பேருந்து, புறநகர்ப் பேருந்து சேவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஜூஜூவாடி எல்லையைத் தாண்டிச் செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் தமிழக போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ