Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சம்பாத்தியத்தில் 90 சதவீதத்தை நன்கொடையாக வழங்கிய சூப்பர் ஹீரோ!

றட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் மகாராஷ்ட்ராவின் மராத்வாடா. கூரைகள் இல்லாத வீடுகள். கொடூர வெயிலில், விவசாய நிலங்கள் பாளம் பாளமாக வெடித்திருக்கும். மின்சாரமும் இருக்காது. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருப்பார். அரசியல்வாதிகளே எட்டிப் பார்க்க தயங்கும் மக்கள் நிறைந்த பகுதி. இங்கு அடிக்கடி ஒரு பிரபலத்தை மட்டும் காண முடியும். இருட்டிலும் கூட செல்போன் வெளிச்சத்தில்,  அந்த பிரபலத்தின் கைகள் செக் விநியோகித்துக் கொண்டிருக்கும். சினிமா உலகில் அவரது பெயர் நானா படேகர். சையிரட்டுக்கு முன் நம்மிடம் அறிமுகமான மராத்திய நடிகர்.

திரையுலகுக்கு வருதற்கு முன் போஸ்டர் ஒட்டியும், சாலைகளில் ஜீப்ரா கோடு வரைவதும்தான் நானாவின் பிழைப்பு. தினச்சம்பளம் 35 ரூபாய். சொற்ப சம்பளத்தில் தாயும் மகனும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர். மராத்தி நாடகங்களில் நடித்து, ஹிந்தி சினிமாவில் புகுந்த பிறகு, வருமானம் கொட்டியது. மூன்றே  மாதங்களில் முழு சினிமாவை முடித்து விடும் இன்றைய காலத்தில், 'பிரகார் ' என்ற படத்தில் நடிப்பதற்காக, இந்திய ராணுவத்திடம் 3 ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற, சற்றே வித்தியாச நடிகர் நானா.  

மகாராஷ்ட்ராவில் கடந்த சில ஆண்டுகளாக வரலாறு காணாத வறட்சி. கிராமத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை. அரசாலும் தடுக்கமுடியவில்லை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போராடியும் இயலவில்லை. நடிகர் என்பதையும் தாண்டி, சொந்த மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கொத்து கொத்தாக செத்து மடிவது நானாவை என்னவோ செய்தது. குறிப்பாக மராத்வாடாப் பகுதியில் நாக்பூர், லாத்தூர், ஹிங்கோலி, பிரபானி, நான்டெட் மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலை அதிகம்.


விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க என்ன செய்யலாம் என யோசித்தார் நானா. சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்தார். சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து 'நாம் ' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கினார். முதல் நாளே 80 லட்ச ரூபாய் நன்கொடை குவிந்தது. நானா படேகர் என்ற அந்த பெயருக்கு மக்களிடம் அத்தனை செல்வாக்கு. 2 வது வாரத்தில் 7 கோடியாக உயர்ந்தது. மொத்தம் 22 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.

நன்கொடை பணம் முழுவதும் விவசாயிகளுக்கு முழுமையாக சேர வேண்டும் என்பது நானாவின் அடுத்த இலக்கு. இந்த விஷயத்தில் நானா படேகர் உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தார். நன்கொடையும் ஏராளமாக வந்துவிட்டது. வேறு ஏதாவது அமைப்பு வழியாக வழங்கிடுவோம் என்று அவர் ஒதுங்கி விடவில்லை. மூன்றாவது அமைப்பின் தலையீட்டை அவர் அனுமதிக்கவில்லை. எந்த அமைப்பையும் அணுகவில்லை. அவரே நேரடியாக களத்தில் குதித்தார்.

மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரை வீடு வீடாக சென்று நானாவே நேரடியாக சந்தித்தார்.  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வறட்சியால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர்க்கு நேரடியாக சென்று நிதியுதவி வழங்கினார். கணவரை இழந்த மனைவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மகாராஷ்ட்ராவில்,  இப்போது 700க்கும் மேற்பட்ட கிராமங்களில், நானா படேகரின் அறக்கட்டளை, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உதவி செய்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை குறைந்திருப்பது நானாவுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. நிதியுதவி போக, எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை  தூர் வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ஒரு கோடிக்கு மேல் மரங்கள் நடப்பட்டன. கணவனை இழந்த பெண்களுக்கு சுய வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.

ஒவ்வொரு கிராமத்துக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவது நானா படேகரின் அடுத்த இலக்கு. அறக்கட்டளை வழியாக சேர்ந்த பணத்தை மட்டுமல்லாது, சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தில் 90 சதவீதத்தை அறக்கட்டளைக்கே நானா படேகர் வழங்கி விட்டார்.

திரையில் ஆன்டி ஹீரோவாக நடிக்கும் நானாதான், மராத்வாடா மக்களின் நிஜ ஹீரோ.கோடி கோடியாக பணம் சம்பாதித்த போதும், மும்பையில் ஒரு பெட்ரூம் கொண்ட பிளாட்டில்தான் இப்போதும் தாயுடன் வசிக்கிறார் நானா. ''சம்பாதித்த பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டீர்களே'' என்றால் , 'இப்போதுதான் நான் பிறந்ததற்கான அர்த்தத்தை உணர்ந்திருக்கிறேன்'' என 'நச்' பதில் வருகிறது.

'தற்கொலைக்கு முன் என்னை ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள்...'! - நானாவின் உதடுகள் அடிக்கடி உதிர்க்கும் வார்த்தை இது.
 

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ