Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை உட்கொள்ளாதீர்கள்! - மோடி அறிவுரை

புதுடெல்லி: டெங்கு போன்ற நோய்கள் பரவி வருவதால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே மக்கள் உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுரை கூறி உள்ளார்.

அகில இந்திய வானொலியில் தனது மாதாந்திர உரையான 'மனதின் குரல்' (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் நேற்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ''நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது காலத்துக்கு முன்பு நாம் வறட்சி குறித்து கவலைப்பட்டோம். ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் நாம் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சில மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதைச் சமாளிக்க மாநில அரசுகளும், மத்திய அரசும் நெருங்கிப் பணியாற்றி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

இளைஞர்கள் தாங்கள் பார்க்கும் பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி செய்து, அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அவ்வாறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண உருவாக்கப்படும் தொழில்நுட்பங்களுக்கு விருது வழங்க அரசு விரும்புகிறது. இதுவே மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

இந்தியா தற்போது பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நாம் அன்றாட வாழ்வில் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகளை நாம் ஆராய வேண்டும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியிலான தீர்வுகளைக் கண்டறிவதற்காக இளைஞர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அடல் புதுமைப் படைத்தல் திட்டத்தை (அடல் இன்னோவேஷன் மிஷன் - 'எய்ம்') மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புதுமைப் படைத்தல், பரிசோதனை, தொழில் முனைவு என்ற கட்டமைப்பை உருவாக்கவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் அரசு விரும்புகிறது.

அடுத்த தலைமுறை புதுமை படைப்போரை நாம் உருவாக்க வேண்டுமானால், 'எய்ம்' திட்டத்துடன் நமது குழந்தைகளை இணைக்க வேண்டும். அதனால்தான் அடல் ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்கும் முன்முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்த ஆய்வகங்களை அமைக்கும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும். மேலும் அவற்றை ஐந்து ஆண்டுகளுக்குப் பராமரிப்பதற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் பிரசாரம் ஒன்றை மக்கள் தொடங்க வேண்டும். வெற்றி-தோல்வி எப்படி இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மிகவும் அவசியமாகும். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு நாட்டு மக்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். அவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கு நான் தபால்காரராக சேவை செய்யத் தயாராக இருக்கிறேன்.

நாட்டின் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தொடங்க உள்ளன. மேலும் 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-வது ஆண்டு விழாவையும் வரும் ஆகஸ்ட் 9 ல் நாடு கொண்டாட வேண்டும். தேசியவாதச் சூழலை உருவாக்குவதன் மூலம் நாட்டு மக்கள் இந்த நிகழ்ச்சிகளை பண்டிகை போல் கொண்டாட வேண்டும். இது அரசு நிகழ்ச்சியாக இல்லாமல் நாட்டு மக்களின் கொண்டாட்டமாக இருக்க வேண்டும்.

தீபாவளியைப்போல், அது நமது சொந்தப் பண்டிகையாக இருக்க வேண்டும். அது தொடர்பான படங்களை மக்கள் எனது செல்லிடப்பேசி செயலிக்கு (ஆப்) அனுப்புவார்கள் என்று நம்புகிறேன். எதிர்வரும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் நான் ஆற்றவுள்ள உரையில் சேர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து நாட்டு மக்கள் தங்கள் ஆலோசனைகளை எனக்கு அனுப்பி வைக்கலாம்.

குழந்தை பிறப்பின்போது இறப்புகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டியது அவசியம். உலக வங்கி வெளியிட்ட தகவல்களின்படி, இந்தியாவில் பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் கடந்த 1990-ம் ஆண்டில் 556 ஆக இருந்தது. அது தற்போது 174 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிகளின் நலனுக்காக 'பிரதம மந்திரி சுரக்ஷித் மாத்ருத்வ அபியான்' திட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம். அத்திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகள்,  ஒவ்வொரு மாதமும் 9ம் தேதியன்று ஏழை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதிகளை அளிக்கும்.

மருத்துவமனைகளில் பணிபுரியாத மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்க வேண்டும். இதுபோன்ற பணிகளுக்கு லட்சக்கணக்கான மருத்துவர்கள் இத்திட்டத்தில் இணைய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மகப்பேறியல் மருத்துவர்கள் மாதம்தோறும் தங்களின் ஒரு நாளை இதற்காக ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும்.

டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன. எனினும், நோய் எதிர்ப்பு மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்" என்றார்

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ