Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் மீண்டும் ஏலம்!

மும்பை: வங்கி மோசடி வழக்கில் வெளிநாடு தப்பிச்சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீண்டும் இம்மாதம் ஏலம் விடப்பட உள்ளன.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றுவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் இந்தியாவைவிட்டு லண்டன் தப்பிச் சென்று விட்டார். சில வழக்குகளிலும் விஜய் மல்லையாவுக்கு எதிராகக் கைது ஆணைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துள்ளன.

ஐ.டி.பி.ஐ., வங்கியிடம் இருந்து ரூ.900 கோடியை கடனாக வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், விஜய் மல்லையாவுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு விசாரணையில் மல்லையா நேரில் ஆஜராகததால், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று மல்லையாவுக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது.

வங்கிகளிடம் பெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அதனால், இந்தியாவில் உள்ள அவருக்கு சொந்தமான சொத்துகளை ஏலம்விட்டு கடனை மீட்க வங்கிகள் திட்டமிட்டன. ஆனால், ஏலத்தில் விற்க ஏற்கனவே நடந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்துகளை இந்த மாதம் (ஆகஸ்ட் 4-ம் தேதி) இரண்டாவது முறையாக ஏலம் விட வங்கிகளும், சேவை வரித் துறையும் திட்டமிட்டுள்ளன. இவற்றில், விஜய் மல்லையா தனது சொந்த உபயோகத்துக்கு வைத்திருந்த சொகுசு ஜெட் விமானமும் அடங்கும்.

அந்த விமானத்தை கடந்த ஜூன் மாதம், ஏலத்தில் விற்க நடந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அதை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சேவை வரித்துறை, மீண்டும் ஏலம் விடும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதன் ஆரம்ப விலை, முன்பு ரூ.152 கோடியாக இருந்தது. தற்போது அதன் விலை, ரூ.135 கோடியாகக் குறைத்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், மும்பை உள்நாட்டு விமான நிலையம் அருகே உள்ள கிங்ஃபிஷர் இல்லமும் ஏலம் விடப்படுகிறது. 17 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இதுதான், கிங்ஃபிஷர் ஏர்லைன்சின் தலைமையகம் ஆகும். பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பு இதை ஏலம் விடுகிறது.

மேலும், விஜய் மல்லையா பயன்படுத்திய டொயோட்டா இனோவா, ஹோண்டா சிவிக், டொயோட்டா கோரெல்லா உள்ளிட்ட 8 கார்கள் ஏலத்துக்கு வருகின்றன.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் (லோகோ), விளம்பர வாசகம் (பிளை தி குட் டைம்ஸ்) போன்றவையும் ஏலத்துக்கு வருகின்றன. அவற்றின் குறைந்தபட்ச விலை ரூ.330 கோடி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தின் கண்டோலிம் பகுதியில் அமைந்துள்ள கிங் ஃபிஷர் சொகுசு பங்களாவை ஏலம் விடும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ