Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஷெர்ஷா துப்பாக்கியும் கற்கால பொருட்களும் எங்கே?’ -சிலைக் கடத்தலை விஞ்சும் தொல்லியல் திருட்டு!

'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் ஆய்வுப் பொருட்கள் திருடு போய்விட்டன' என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ' தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களைப் பாதுகாப்பதில் மெத்தனமாகச் செயல்படுகிறார்கள். சிலைக்கடத்தலுக்கு இணையாக தொல்லியல் பொருட்கள் களவு போகின்றன' என வேதனைப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் தொல்லியல் துறை செயல்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துவது, ஆய்வின் மூலம் கிடைக்கும் பொருட்களைப் பாதுகாத்து வைப்பது என மிக முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது இத்துறை. இந்த நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய கல்வெட்டுகள் மற்றும் பழங்கால எலும்புகள் உள்பட 24 வகையான பொருட்கள் மாயமாகிவிட்டதாக, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம்.

இவற்றில்,  மகாராஷ்டிராவின் பெருங்கற்கால கற்கள், உத்தரபிரதேசத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கற்களில் எழுதப்பட்ட எழுத்துருக்கள், இடிந்துபோன புத்த, இந்து கோவில்களில் இருந்த பொருட்கள், ஆப்கானிஸ்தான் அரசர் ஷெர்ஷாவின் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துப்பாக்கி, பண்டைய மனிதர்களின் எலும்புகள் உள்ளிட்டவை மாயமாகிவிட்டன.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, " பழைய ஆவணப் பதிவுகள் மற்றும் ஆவணங்களில் இருந்து மாயமான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கென தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தனியார்கள் கட்டுமானங்களை எழுப்பாத வகையில் செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிக்க, இஸ்ரோவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளோம்" என்றார்.

இந்நிலையில் தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் ஒருவரிடம் இது தொடர்பாக பேசினோம்.

" தொல்லியல் துறையில் களவுபோன பொருட்களுக்கு விலை மதிப்பே இல்லை. சென்னை அருங்காட்சியகத்திலும் சில மாதங்களுக்கு முன்னால் தொல்லியல் பொருட்கள் திருடு போய்விட்டன. சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும், களவாடியவர்கள் யார் என்பதைக் கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல், அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களைப் பாதுகாக்க எந்தவித நடைமுறையும் பின்பற்றப்படுவது இல்லை. ஒரு இடத்தில் இருந்து பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டால், அவற்றை அறைகளில் வைத்துப் பூட்டிவிடுகின்றனர். அரசு மியூசியங்களில் வைத்துப் பாதுகாத்தால், ஏராளமானோர் அதைப் படம் எடுக்க வாய்ப்புள்ளது. பிறகு அவை காணாமல் போய்விட்டால்கூட கண்டறிய வாய்ப்பும் கிடைக்கிறது. அறைக்குள் முடங்கிக் கிடக்கும் சிலைகளை யாராவது திருடிக் கொண்டு போனால், போலியாக இன்னொன்றைத் தயாரித்து அதே இடத்தில் வைத்துவிட முடியும்.

இப்படியொரு திருட்டு நடந்ததே வெளி உலகின் கவனத்திற்கு வராமலேயே போய்விடுகிறது. இப்படித்தான் நாடு முழுவதும் தொல்லியல் நிறுவனங்களில் திருட்டு நடக்கிறது. இதற்கு சில ஊழியர்களும் காரணமாக இருக்கிறார்கள். இவற்றின் பழமை மதிப்பு தெரியாமலேயே சில ஆயிரங்களுக்கு விற்றுவிடுகிறார்கள். மன்னர் ஷெர்ஷாவின் துப்பாக்கி உள்பட, புத்த விகாரங்களில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள், திருடிக் கொண்டு போய்விட்டார்கள். இவற்றையெல்லாம் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வருவது சவாலான பணி. காலம்காலமாக திருடு போய்க் கொண்டுதான் இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் ஒரு பொருள் கிடைக்கும்போது, அன்றைக்கு அதுபற்றிய செய்தி வெளியாவதோடு முடித்துவிடுகிறார்கள். அதன்பிறகு முறையான பராமரிப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது" என வேதனைப்பட்டார்.

-ஆ.விஜயானந்த்

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close