Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உத்தரகாண்டில் நிலச்சரிவு... ஒருவர் பலி! - சர்தாம் யாத்திரை பாதிப்பு

 

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். மேலும், நிலச்சரிவு காரணமாக அங்குள்ளச் சாலைகள் மூடப்பட்டுள்ளதால், பக்தர்களின் சர்தாம் யாத்திரையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதா சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பங்கபாணி பகுதியில் நேற்று மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, சரிந்து விழுந்த கற்பாறைகள் மோதியதில், டான் சிங் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த நிலச்சரிவால், இமயமலையில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத் ஆலயங்களுக்கு செல்லும் சர்தாம் புனிதயாத்திரையும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயங்களுக்கு செல்லக்கூடிய ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜோஷிமத்-மலரி எல்லை சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புனித யாத்திரை பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. 386 யாத்ரீகர்கள் பத்ரிநாத்திலும் 258 யாத்ரீகர்கள் சாஹிப்பிலும் உள்ளனர். அவர்கள் திரும்பி வருவதற்கு போக்குவரத்து இன்னும் சரி செய்யப்படவில்லை.

ரிஷிகேஷ்-கேதார்நாத் நெடுஞ்சாலையில் முன்கட்டியா, டோலியா மந்திர் மற்றும் கரிகுந்த் ஆகிய இடங்களில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கோயிலுக்கு செல்லும் மலையேற்ற பாதை திறந்து உள்ளது. இன்று காலை 32 யாத்ரீகர்கள் கவுரிகுந்த், பீம்பளி, லிஞ்சாவ்லி ஆகிய பகுதிகளில் இருந்து தங்கள் யாத்திரையை தொடர்ந்தனர்.


இதேபோல், இமாச்சல பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான இடங்களிலும் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்துஸ்தான்-திபெத் சாலையில் மரங்கள் வேரோடு விழுந்துள்ளன. மாநிலத்தின் பல இடங்களில் தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ