Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்மநாபசாமி கோவிலில் தங்கம் மாயம்... சி.பி.ஐ. விசாரணை கோரும் அச்சுதானந்தன்!

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவிலில் இருந்த ரூ.186 கோடி மதிப்புள்ள தங்கப் பானைகள் காணாமல் போனது பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வலியுறுத்தி உள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பத்மநாபசாமி கோயில் உள்ளது. பழமையான அக்கோயிலில், ரகசிய பாதாள அறைகள் இருப்பதாகவும், அங்கு பொக்கிஷங்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், கோயிலில் 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அங்கு தங்கம், வெள்ளி ஆபரணங்கள் என ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு போடப்பட்டது.

மேலும், கோயிலை ஆய்வு செய்ய நீதிமன்ற ஆலோசகராக மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார். அவர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதுபற்றி முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராயிடம் கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

அதன்படி, 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான கணக்குகளை வினோத் ராய் கமிட்டி தணிக்கை செய்து உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் ரூ.186 கோடி மதிப்புள்ள 769 தங்க பானைகள் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பல ஆண்டுகளாகவே இந்த குற்றச்சாட்டை நான் கூறி வருகிறேன்.

ஆனால் அப்போது, பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதாக என்னை குறை கூறினர். இப்போது உச்ச நீதிமன்றத்தின் ஆலோசகர் கோபால் சுப்பிரமணியம் மற்றும் வினோத்ராய் இருவரும் கோவிலின் ரகசிய பாதாள அறையில் இருந்த ரூ.186 கோடி தங்கம் திருட்டுப்போய்விட்டது என்ற முடிவுக்குத்தான் வந்துள்ளனர்.

 

இதுபோன்ற நிலையில் இந்த திருட்டை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும்" என்று கூறி உள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ