Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்ன ஆனது சோனியா காந்திக்கு?

த்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் பிரசாரத்துக்காகக் கடந்த 2-ம் தேதி வாரணாசி சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீரென தனது பிரசாரத்தை ரத்துசெய்தார். காய்ச்சல் காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பிரசாரத்தை ரத்துசெய்ததாகச் சொன்னார்கள்.

69-வயதாகும் சோனியா காந்திக்கு முதுமை காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு வருகிறது. உடல்நலக் குறைவு குறித்து ஆரம்பத்தில் செய்திகள் ஏதும் வெளிவராமல் தடுக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் திடீரென அமெரிக்காவுக்கு ரகசியப் பயணம் சென்றார் சோனியா காந்தி. அமெரிக்காவில், ஒரு மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது என்று 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தகவல் வெளியானது. இதை காங்கிரஸ் மேலிடம் மறுக்கவில்லை. எந்த மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடந்தது என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்குப் பின்னர் அவர் நாடு திரும்பினார். பின்னர், அவ்வப்போது மருத்துவக் காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுவந்தார்.

உடல்நலக் குறைவு மற்றும் முதிய வயதிலும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். இதன் விளைவாக அதே ஆண்டு அக்டோபரில் மீண்டும் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக 2014-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சோனியா காந்திக்கு சுவாசக்குழாயின் கீழ்ப்பகுதியில் நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதற்காகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பினார். உடல்நிலையைக் கருத்தில் கொண்டுதான் முக்கியமான நிகழ்வுகளைத் தவிர, வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை. ராகுல்தான் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றபோதுதான் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 2-ம் தேதி வாரணாசியில் இருந்து அழைத்துவரப்பட்ட சோனியா காந்தி முதலில் புதுடெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் கங்காராம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தோள்பட்டையில் அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். மருத்துவமனையிலிருந்து 14-ம் தேதி அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், பின்னர் மீண்டும் 18-ம் தேதி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபரேஷனுக்குப் பின்னர் தோள்பட்டையில் போடப்பட்ட தையலை நீக்குவதற்காக மருத்துவர் அறிவுரையின்பேரில் மீண்டும் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர். இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்பிவிடுவார் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் கூறுகின்றனர்.

தொடர்ந்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு, உத்தரப்பிரதேசத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அங்கு, ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டுகின்றனர். இந்த நேரத்தில் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருப்பது காங்கிரஸ்காரர்களைக் கவலைப்பட வைத்துள்ளது.

- கே.பாலசுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ