Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிந்து வேறுயாருமில்லை... அவள் இந்த தேசத்தின் மகள்...! #PVSindhu

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பி.வி.சிந்து.

அவரைக் கொண்டாட வேண்டிய மக்கள், அவரின் சாதியையும் வசிக்கும் பகுதியையும் கூகுளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவாதங்கள் ஆரம்பமாகி இருக்கின்றன. அவர், வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், இந்தத் தேடலும் ஒருபுறம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள், அரசியல் கட்சிகளுக்கு இடையில் இதைப் பற்றிய வாக்குவாதங்களும் தேடல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தெலங்கானா முதல் அமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திரா முதல் அமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்ற சிந்துவுக்கு ஊக்கத்தொகை, நிலம் மற்றும் அரசுப் பணியை அறிவித்தனர். இரு மாநில முதல்வர்களும் பரிசுகளை அறிவித்ததால், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற தேடல்கள் ஆரம்பமாகியிருக்கின்றன.

தெலுங்கு மொழியின் பிரபல பத்திரிகையான 'ஈனாடு', 'அண்மையில் நடந்த போனாலு என்ற தெலங்கானா பாரம்பர்ய திருவிழாவில் சிந்து கலந்துகொண்டார்' என ஹைதராபாத் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்து. இன்னொரு பக்கம் 'ஆந்திர ஜோதி' என்ற நாளிதழில், சிந்துவின் தந்தை பி.வி.ரமணா, 'தன்னுடைய மகள் வெற்றி பெற வேண்டும்' என்று கோதாவரி மாவட்டம் ரத்னலம்மா குன்டா கிராமத்தில் உள்ள கோயிலில் சிறப்புப் பூஜை செய்துள்ளார் எனச் செய்தி வெளியிட்டிருந்தது. இதுதான் சிந்துவுடைய சொந்த ஊர் என்று சொல்லப்படுகிறது.

ஊடகம் ஒன்று, சிந்துவின் அப்பா உடனான பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில், அவர் அடிலாபாத்தில் உள்ள நிர்மல் என்கிற ஊரைச் சேர்ந்தவர் என்றும், சிந்துவின் அம்மா விஜயா சென்னையைச் சேர்ந்தவர் என்றும், சிந்து பிறந்து வளர்ந்தது ஹைதராபாத் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் ஒரு சிலர் சிந்து, தெலங்கானா மாநிலத்ததைச் சேர்ந்தவர் என்கின்றனர். வேறு சிலர், சிந்துவின் தந்தை ஆந்திராவில் குடிபெயர்ந்து உள்ளதாலும், அவரது தாயார் விஜயவாடாவில் இருந்து வந்தவர் என்பதாலும், சிந்து ஆந்திராவைச் சேர்ந்தவர் என்கிறார்கள்.

கூகுளில் சிலர், சிந்துவின் சாதியையும் தேடியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அவர் விருது வாங்கிய சில நொடிகளில், 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அதில் சிந்துவுக்கு, ‘காப்பு ரத்னா’ (காப்பு சமூகப் பதக்கம்) விருது ஆந்திரா காப்புச் சமூகத்தால் ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது என்றும், அவரின் தாயார் கம்மாச் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்தக் குழப்பங்கள் போதாது என்று தலித் கிறிஸ்தவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர், ''சிந்துவின் வெற்றிக்கும் பாராட்டுக்கும் காரணம், அவர் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படித்ததுதான்'' என்கிறார்கள்.

விளையாட்டுகள் மனிதர்களுக்கிடையான இறுக்கங்களைத் தகர்த்தி, ஒரு நெகிழ்ச்சியை உண்டாக்கி, அதன்மூலம் தேசங்களுக்கிடையே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டமாக நாம் ஒரு தேசத்துக்குள்ளேயே பிரிவினையை உண்டாக்கிக் கொண்டு இருக்கிறோம். சிந்து, இந்தத் தேசத்தின் மகள். அவருடைய சாதி, மொழி, இனம் கடந்து அனைவருக்கும் சொந்தம்!

- சு.நந்தினி

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ