Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாடகைத் தாய் முறை... தவறாகப் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.10 லட்சம் வரை அபராதம்!

புதுடெல்லி: வாடகைத் தாய் முறை வாயிலாக சட்ட விதிகளுக்குப் புறம்பாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இந்தியாவில் சட்ட அனுமதி உண்டு. நாடு முழுவதும் வாடகைத்தாய் முறை வேகமாக பிரபலமடைந்துள்ள நிலையில் அது தொடர்பான முறைகேடுகளும் பிரச்னைகளும் பெருகிவருகின்றன. அதைத் தவறாகப் பயன்படுத்தி சிலர், வர்த்தகமயமாக்கி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் பலர் இந்தியப் பெண்களை வாடகைத் தாய் முறைக்கு உட்படுத்தி குழந்தை பெறுகின்றனர். இதைத் தவிர, கிராமப்புறப் பெண்கள் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு பண ஆசை காட்டியும், மூளைச் சலவை செய்தும் வாடகைத் தாயாக செயல்பட அனுமதிக்க வைக்கப்படுவதுடன், அவர்களை ஏமாற்றியும், கொடுமைப்படுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் வாடகைத்தாய் முறையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது.

அதற்கான வரைவு விதிகளை வகுக்க மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, நிர்மலா சீதாராமன், ஹர்சிம்ரத் கெளர் பாதல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த வரைவு மசோதா மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதாவில், வாடகைத் தாய் முறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ள பல்வேறு சட்டச்சிக்கல்களுக்கு தீர்வு தரும் அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மசோதாவில், வெளிநாட்டுத் தம்பதியினர் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தத் தடை விதிக்கும் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வாடகைத் தாய் முறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது மற்றும் அதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு சட்ட உரிமைகள் வழங்குவது தொடர்பான ஷரத்துக்களும் இடம்பெற்றுள்ளன. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், வாழ்க்கைத் துணையைப் பிரிந்து வாழ்பவர்கள் ஆகியோர் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற அனுமதி இல்லை.

சட்டவிரோதமாகவோ, வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றால், அதில் தொடர்புடையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும், போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மசோதா, எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ