Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'500 ரூபாய் கொடுத்தால் ஜெயிலுக்கு போகலாம்!' - தெலுங்கானா அரசின் புதுத் திட்டம்

ஜெயிலுக்குப் போகணும்னு நாம் யாரும் விரும்பமாட்டோம். ஆனா, ஜெயில் எப்படி இருக்கும்... அங்க கைதிகளுக்குக் கொடுக்கப்படும் வசதிகள் என்ன... உண்மையாகவே கடும் தண்டனைகள் இருக்குமா... இல்லை, படங்கள்ல வர மாதிரி இருக்குமா... அங்கு தரப்படும் உணவு என்ன? இதையெல்லாம் தெரிஞ்சிக்க நமக்கும் ஓர் ஆர்வம் இருக்கும்.

குற்றம் செய்தால்தான் சிறைக்குப் போக வேண்டும் என்றில்லாமல், குற்றம் செய்யாமல், சிறைக்கு சென்று ஒரு நாள் இருந்து சிறையும் சிறை வாழ்க்கையும் எப்படி இருக்கும் என்று அனுபவிக்கும் வகையில் ரூ.500 கட்டணத்தில் ஒரு புதுமையான திட்டத்தை தெலுங்கானா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள சங்க ரெட்டி என்ற இடத்தில் மிகப்பழமையான சிறை வளாகம் ஒன்று உள்ளது. அந்த சிறைச்சாலையில், சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டுக்காக போராடியவர்கள் அடைக்கப்பட்டு இருந்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்தப் பிறகு, அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையாக மாறியது.

இந்த சிறையில், ஒருநாள் முழுவதும் இருந்து 'சிறை வாழ்க்கை”யை அனுபவிக்க ஆசைப்படுவர்களுக்கு தெலுங்கானா அரசு ஒரு புதிய திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடு மூலம், ஒருவர் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒருநாள் முழுக்க சிறைக்குள் இருந்துவிட்டு வெளியே வரலாம்.

 

 

இப்படி சிறைக்கு சென்று வர நினைப்பவர்கள், முதலில் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். அதன்பின் ஒரு குறிப்பிட்ட நாளன்று பணம் கட்டியவர்களுக்கு அழைப்பு வரும். அன்று அவர்கள் சிறைக்கு சென்றதும், சிறை அறைக்குள் அடைக்கப்பட்டு கைதிகள் போலவே நடத்தப்படுவார்கள்.

மேலும் அவர்களுக்கு, சிறைக்குள் கைதிகளுக்கு கொடுக்கப்படுவதுபோல காலை 6 மணிக்கு டீ தருவார்கள். 7.30 மணிக்கு காலை உணவு, 10.30 மணிக்கு மீண்டும் டீ, 12.30 மணிக்கு மதியம் உணவு கொடுக்கப்படும். மாலை 5 மணிக்கு டின்னர் கொடுக்கப்பட்டு மாலை 6 மணிக்கு சிறையில் இருந்து வெளியே அனுப்பப்படுவார்கள்.

சிறையில் இருக்கும் அன்று ஒருநாள் முழுவதும் அவர்களுக்கு, கைதிகள் அணியும் உடை கொடுக்கப்பட்டு கைதியை போல் நடத்தப்படுவார்கள். சிறைக்குள் இருக்கும்போது, விருப்பம் உள்ளவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து ஏதாவது வேலைகூட செய்யலாம்.

குற்றம் செய்யாவதர்களும், சிறைக்கு சென்று, சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் புதுமையான இத்திட்டத்தை, நாட்டிலேயே முதல்முறையாக தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- கோ.செந்தில்குமார், நந்தினி சுப்பிரமணி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ