Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடிநீர் டேங்கர் ஊழலில் ஷீலா தீட்சித்தை மத்திய அரசு பாதுகாக்கிறது! - கபில் மிஸ்ரா குற்றச்சாட்டு

புதுடெல்லி: குடிநீர் டேங்கர் ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை மத்திய அரசு பாதுகாக்கிறது என்று டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.

டெல்லி மாநில குடிநீர் வாரியத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு 385 குடிநீர் டேங்கர்கள் வாங்கப்பட்டன. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு ஒன்றை கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லியின் ஆம் ஆத்மி அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கைப்படி, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் இந்த டேங்கர்கள் வாங்கியதில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை எனவும், இது அரசியல் நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்றும் ஷீலா தீட்சித் கூறி வந்தார்.

இந்த நிலையில் நிஜாமுதீனில் உள்ள ஷீலா தீட்சித்தின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்ற ஊழல் தடுப்பு அதிகாரிகள், இந்த ஊழல் தொடர்பான கேள்விகள் அடங்கிய பட்டியலை அவரிடம் அளித்தனர். மேலும் அதற்கு, ஓரிரு நாட்களில் பதிலளிக்குமாறு அவர்கள் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் இந்த வழக்கு விசாரணையில் ஷீலா தீட்சித்தை பா.ஜனதா அரசு பாதுகாக்க முயல்வதாகவும், அவரிடம் நேற்று நடத்தப்பட்ட விசாரணை வெறும் சம்பிரதாயமான நடவடிக்கை எனவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து டெல்லி அமைச்சர் கபில் மிஸ்ரா கூறும்போது, ''இந்த ஊழல் விவகாரம் குறித்து நான்தான் புகார் அளித்தேன். புகார்தாரரான என்னை ஊழல் தடுப்பு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து, 12-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். பல குறுக்கு கேள்விகளையும் கேட்ட அவர்கள், இது தொடர்பாக வாக்குமூலத்திலும் கையெழுத்து வாங்கினர்.

ஆனால், ஷீலா தீட்சித்தை விசாரணைக்காக அவர்கள் தங்கள் அலுவலகத்துக்கு அழைக்கவில்லை. மாறாக அவரது இடத்துக்கே சென்று, காபி குடித்துவிட்டு 20 நிமிடங்கள் தங்கிவிட்டு விசாரணை எதுவும் நடத்தாமல் சில கேள்விகள் அடங்கிய பட்டியல் மட்டுமே கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இது வெறும் சம்பிரதாயமான நடவடிக்கை மட்டும்தான். மத்திய பா.ஜனதா அரசு ஷீலா தீட்சித்தை பாதுகாத்து வருவதுடன், அவரை பாதுகாக்குமாறு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கும் அழுத்தம் தருகிறது" என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ