Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெல்மெட்டுக்கு வாட் வரி ரத்து, பெண்களுக்கு வட்டியில்லா கடன்! - புதுச்சேரி பட்ஜெட்

புதுச்சேரி: தனது முதல் பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, ஹெல்மெட்டுக்கு வாட் வரி முழுவதுமாக ரத்து செய்யப்படும். ஒரு லட்சம் மகளிருக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.

புதுவையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆட்சியில் இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி பதவி ஏற்றபின், அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய ஆயத்தமானது. அதன்படி, புதுச்சேரியில் 14வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. அன்று ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். அதன்பின் அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது.

முதலில் செப்டம்பர் 7-ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அலுவல் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 9-ம் தேதி வரை கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத் தொடரில் 2016-17-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி இன்று காலை 9.30 மனிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, ''புதுவை அரசின் திட்டமில்லா செலவுக்கு ரூ. 4 ஆயிரத்து 100 கோடியும், திட்ட செலவுக்கு ரூ. 2 ஆயிரத்து 565 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை புதுவை அரசுக்கு ரூ.6 ஆயிரத்து 651 கோடி கடன் உள்ளது. இதற்காக அசலுடன் வட்டியையும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.500 கோடி செலுத்தி வருகிறோம். தற்போது மத்திய அரசு வட்டி கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வரும் காலத்தில் மேலும் ரூ.500 கோடி கூடுதலாக வழங்க வேண்டி இருக்கும். இவை அனைத்துக்கும் கடந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளே காரணம். இது மட்டுமில்லாமல் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல் படுத்தினால் மேலும் ரூ.500 கோடி அரசுக்கு கூடுதலாக தேவைப்படும்.

மேலும், ஹெல்மெட்டுக்கு வாட்வரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்பதற்காக எல்.இ.டி. பல்புகள் பயன்பாட்டை அதிகரிக்கவும் எல்.இ.டி. பல்புகளுக்கான வரி 8 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இனி தெருவிளக்குகள் அனைத்தும் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்படும். மேலும், கலால் துறைக்கு 775 கோடி ரூபாய் வருவாய் இலக்கு. புதுச்சேரியில் இனி தொடங்கப்படும் சில்லறை மதுபான விற்பனைக் கடைகளுக்கு வெளிப்படையான முறையில் உரிமம் வழங்கப்படும்

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயர்த்தப்படுகிறது. புதுச்சேரியின் எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மாலை நேர வெளிப்புற சிகிச்சை பிரிவு இயக்கப்படும். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 64 ஏரிகளை தூர்வாரி பாதுகாக்க ரூ.3.84 கோடி ஒதுக்கப்படும். காரைக்கால், திருநள்ளாற்றில் 6 கோடி ரூபாய் செலவில் அறிவியல் கோலரங்கம் அமைக்கப்படும்

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களும் குடிசை இல்லா பகுதியாக மாற்றப்படும். ஒரு லட்சம் மகளிருக்கு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும். 40 வயதை தாண்டிய பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவச முழு உடற் பரிசோதனை செய்யப்படும்" என்றார்.

முன்னதாக, புதுச்சேரி பட்ஜெட் திங்கட்கிழமை பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கெனவே அரசு இணையதளத்தில் பட்ஜெட் விவரங்கள் கசிந்ததாக முன்னாள் எம்.பி. ராமதாஸ் புகார் கூறியிருந்தார். இதனால், பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- படங்கள்: தேவராஜன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ