Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சையை ஏற்படுத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா

‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழி உண்டு. ஆனால், யார் எந்த ஆடை அணிய வேண்டும் என்று யார் ஒருவரும் முடிவு செய்ய முடியாது. ஒவ்வொருவரும் அவர்களின் விரும்பிய ஆடைகள் அணிவது அவர்களின் சுதந்திரம்.

பி.ஜே.பி அரசு சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல, இந்த முறை சர்ச்சையில் சிக்கியுள்ளவர் இந்தியாவின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் மகேஷ் ஷர்மா, “இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விமான நிலையத்திலேயே செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் பற்றிய முழு விவரம் கொண்ட பட்டியல் அளிக்கப்படும் என்று கூறினார். வெளிநாட்டு பெண்கள் இந்தியாவுக்கு வரும் போது குட்டையான பாவாடைகளும், ஷார்ட்ஸும் அணிய கூடாது. உடைகள் தான் பெண்கள் மீது தாக்குதல்கள் ஏற்பட காரணம். மேலும் அவர்கள் இரவு நேரங்களில் வெளியிலும் செல்லக் கூடாது. இது அவர்களின் பாதுகாப்புகாக சொல்லப்பட்டது. 

இந்தியாவின் கலாச்சாரம் மற்ற மேற்கத்திய நாடுகளில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது. இன்னும் இந்தியாவில் பல பகுதிகளில் அந்தந்த சலாசார உடைகளை பெண்கள் அணிந்து வருகிறார்கள். அது போன்ற இடங்களுக்கு செல்லும் போது அந்த இடங்களை பற்றி நன்கு அறிந்து செல்ல வேண்டும். இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் ஆலோசனையிலும் செல்லும் நாட்டினுடைய கலாச்சாரங்களை, உடைகளையும் மதிக்க வேண்டும். பகல் நேரங்களிலும் தனிமையில் வெளியில் செல்வதை தவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.  

இவர் கூறிய விஷயங்கள் சர்ச்சைக்கு உள்ளானதால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல விமர்சனங்கள் வந்தன. இதனால் கருத்தை மாற்றிக் கொண்ட அமைச்சர், “தான் கூறியது மதம் சார்ந்த இடங்களுக்கு மட்டுமே அவ்வாறு உடைகள் பின்பற்ற வேண்டும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை” என்றுள்ளார். 

இது குறித்து ஜனநாயக மாதர் சங்க தலைவர் வனஜா அவர்களிடம் பேசினோம். “பி.ஜே.பி கட்சிக்கு எப்போதும் பெண்கள் மீதான நல்ல பார்வையே கிடையாது, எப்போதுமே பெண்கள் பற்றிய தவறான கருத்துக்களை தெரிவிப்பது வழக்கமாக வைத்துள்ளனர். இந்திய பெண்களையும் தாண்டி இப்போது வெளிநாட்டு பெண்களுக்கான விதிகளையும் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒரு பக்கம் மோடி இந்திய பெண்கள் தெய்வம், திருமகள் என்று சொன்னாலும், அவர்களுக்குள் இருக்கும் தவறான கருத்துக்கள் அவ்வபோது வெளிப்படுகிறது. ஆடைகளுக்கும், பெண்களின் பாதுகாப்புக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை. இந்தியா மீதான மரியாதையும் குறைய கூடும். மற்ற நாட்டுடன் இருக்கும் உறவும் பாதிக்க வாய்ப்புள்ளது”என்றார். 

பெண்கள் என்ன அணிய வேண்டும், என்ன அணிய கூடாது என்பது எப்படி இன்னொருவர் முடிவு செய்ய முடியும்? உடைகளால் தான் பாலியல் பலாத்காரங்கள் அதிகம் ஆகிறது என்பதும் உண்மைக்கு புறம்பான ஒன்று. அப்படி உடைகள் தான் ஆண்களை தவறான செயல்களை செய்ய தூண்டுகிறது என்றால், 2 வயது, 5 வயது குழந்தைகள் என்ன மாதிரியான உடைகள் அணிந்து அவர்களை தவறான செயல்கள் செய்ய தூண்டினார்கள். 

வெளிநாட்டுக்கு செல்லும் இந்திய பெண்கள் அனைவரும் அவர்கள் கலாசாரத்துக்கு ஏற்றவாரு ஷார்ட்ஸும், அளவு குறைந்த உடைகள் தான் அணிய வேண்டும் என்று சொன்னால் நம்மால் ஏற்க முடியுமா? வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமை, அதை தவிர்த்து அவர்கள் உடைகளை மாற்ற சொல்வது அல்ல என பெண் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

- நந்தினி சுப்பிரமணி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close