Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' ஊழலைக் களையாமல், கவுன்சிலைக் கலைக்கலாமா?'  -அரசின் முடிவால் அச்சப்படும் மருத்துவர்கள் 

ந்திய மருத்துவக் கழகத்திற்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ' இதனால் ஊழல்களும் முறைகேடுகளும் அதிகரிக்கவே செய்யும்'  என அச்சப்படுகின்றன மருத்துவ சங்கங்கள். 

மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவைக் கலைத்துவிட்டு, புதிய அமைப்பை உருவாக்குவதற்காக, நிதி அயோக்கின்  துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா, நிதி அயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கான்ட், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பஹானு பிரதாப் சர்மா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு, 'தேசிய மருத்துவ ஆணையம்' என்ற புதிய அமைப்பை உருவாக்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளது.

‘ இதன் மூலம் நான்கு வாரியங்களாக தேசிய மருத்துவ ஆணையம் பிரிக்கப்படும். புதிய அமைப்பில் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் யாரும் பதவி வகிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆணையத்தின் இருபது உறுப்பினர்களும் நியமன உறுப்பினர்களாகவே இருப்பார்கள்' என பனகரியா கமிட்டி பரிந்துரை அறிக்கை தெரிவிக்கிறது. ' மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் கொள்கையை தீவிரப்படுத்தவே, இதுபோன்ற புதிய அமைப்பைக் கொண்டு வர  மத்திய அரசு முயற்சி செய்கிறது" என ஆதங்கத்தோடு நம்மிடம் பேசினார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத். தொடர்ந்து நம்மிடம், 

" இந்திய மருத்துவக் கழகத்தின்(எம்.சி.ஐ) செயல்பாட்டில் பல்வேறு குறைபாடுகளும் ஊழல்களும் மலிந்துள்ளன என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. இவற்றைத் தீர்ப்பதற்கு ஏராளமான ஆலோசனைகளை மத்திய அரசின் கவனத்திற்குப் பலரும் கொண்டு சென்றிருக்கின்றனர். இவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றைத் தீர்ப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மெடிக்கல் கவுன்சிலில் நடக்கும் குளறுபடிகள் அனைத்திற்கும் மத்திய அரசே காரணம். மாறாக, இப்படிப்பட்ட குறைகளைச் சுட்டிக் காட்டி, மெடிக்கல் கவுன்சிலை முற்றிலுமாக அழிக்க முனைகின்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம். மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை கொளுத்துவது போன்ற நடவடிக்கைதான் இது" என்றவர், 

" சில தினங்களுக்கு முன்பாக, தனியார் தொழில் நிறுவனங்கள் தயக்கமின்றி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கி நடத்திட வசதியாக, விதிமுறைகளில் திருத்தம் செய்யக் கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவக் கழகத்திற்கு  உத்தரவிட்டது. அதாவது, 'வணிக நோக்கம் கொண்டதாக மருத்துவக் கல்வியை மாற்றினால், கல்லூரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்' என்ற விதிமுறையை நீக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான், மெடிக்கல் கவுன்சிலை களைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். அதேபோல், ' மருத்துவக் கல்லூரிகளை மக்கள் தொகைக்கு ஏற்ப உருவாக்க எம்.சி.ஐ தவறிவிட்டது' என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்க வேண்டுமெனில், மத்திய, மாநில அரசுகள்தான் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்திய மருத்துவக் கழகம், மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் அமைப்பே தவிர, மருத்துவக் கல்லூரிகளை தொடங்கும் அமைப்பு அல்ல. அதற்கான நிதி ஆதாரம் மெடிக்கல் கவுன்சிலிடம் இல்லை. அரசின் தவறை மறைக்க, மெடிக்கல் கவுன்சில் மீது பழிபோடுவதை நேர்மையற்ற செயலாகவே பார்க்கிறோம். 

மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு ஏற்பவே எம்.சி.ஐ. செயல்படுகிறது. அவ்வளவுதான். உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கு சாதகமாக மத்திய அரசு கடைபிடித்து வரும் மருத்துவக் கல்விக் கொள்கையும் மக்கள் நல்வாழ்வுக் கொள்கையும்தான் இவ்வளவு சீரழிவுக்கும் காரணம். தனியார் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவதற்கு மெடிக்கல் கவுன்சிலைக் குறை சொல்கின்றனர். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் நடைபெறும் அனைத்து முறைகேடுகளுக்கும், மருத்துவக் கல்வியை தனியார் மயமாக்கியதுதான் காரணம். கட்டாய நன்கொடை தடுப்புச் சட்டம் என்பது வலுவற்ற சட்டமாக உள்ளது. 

கட்டாய நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாததே முறைகேடுகள் அதிகரிக்கக் காரணம். இவற்றைக் களையாமல் மெடிக்கல் கவுன்சிலை முற்றிலும் அழிக்கும் செயலில் ஈடுபடுவது சரியானதல்ல. கவுன்சிலின் செயல்பாட்டில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். கவுன்சிலின் அதிகாரங்களைப் பரவலாக்குவது மட்டுமல்லாமல், இந்திய மருத்துவக் கழகத்தின் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அதைவிட்டுவிட்டு, புதிய அமைப்பை உருவாக்குகிறோம் என்ற பெயரில், மருத்துவக் கல்வியின் தரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமையக் கூடாது. மருத்துவர்களின் எதிர்ப்பையும் மீறி புதிய ஆணையம் கொண்டு வரப்பட்டால், போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறுவழியில்லை. இதற்கு முன்னோட்டமாக வரும் வாரத்தில் கறுப்புச் சட்டை அணியும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்" எனக் கொந்தளிப்போடு பேசி முடித்தார் ஜி.ஆர்.ரவீந்திரநாத். 

-ஆ.விஜயானந்த்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ