Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெல்லி வெள்ளம்: படகு கேட்ட ஜான் கெர்ரி! #DelhiFloods⁠⁠⁠⁠

 

‘‘நாம் வெளியே செல்ல வேண்டும் என்றால், நிச்சயம் படகு தேவைப்படும்’’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கிண்டலாகக் கூறும் அளவுக்கு டெல்லியில் மழை கொட்டோ கொட்டு எனக் கொட்டுகிறது.

டெல்லியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து ட்ராஃபிக்கில் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. டெல்லி மக்கள் நேற்றே பெரும் அவஸ்தையை அனுபவித்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்துவருகிறது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல வழிந்து ஓடுவதால், முக்கியச் சாலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன. வாகனங்கள் நத்தைபோல ஊர்ந்துசென்றதால், அலுவலகம் செல்பவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் மழை அதிகரிக்கக்கூடும் என டெல்லி வானிலை மையம் அறிவித்துள்ளதால், மழையைக் கொண்டாட வேண்டிய மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, நேற்று இரவே போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். இந்த நிலையில் இன்று காலையும் நெரிசலில் சிக்கித் தட்டுத்தடுமாறி ஒரு மணி நேரம் தாமதமாக டெல்லி ஐ.ஐ.டி-க்கு வந்தார். அங்கு மாணவர்களிடம் உரையாடிய அவர், ‘‘இங்கிருந்து எப்படி வெளியே செல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நமக்கு நிச்சயம் படகு தேவைப்படும்’’ என கமென்ட் அடித்துள்ளார். இன்று பல இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த ஜான் கெர்ரியின் பயணம், மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

குருகிராமில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களும், ஊழியர்களை வீட்டில் இருந்து பணிகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தி உள்ளன. போதிய வெளிச்சம் இல்லாததால், சொந்த வாகனத்தை விட்டுவிட்டு, ஓலா, உபர் போன்ற டாக்ஸிகளில் செல்ல நினைத்தவர்களும் அல்லாடினார்கள். எல்லா டாக்ஸி அப்களும், ‘டாக்ஸி இல்லை’ என்ற ஒற்றை வாசகத்தையே கூறுகின்றன. டெல்லி போக்குவரத்து போலீஸார், நெரிசல்மிக்க சாலைகளின் விவரங்களைப் பற்றி ட்விட்டரில் ட்விட் போட்டு வருகின்றனர். மேலும், ‘‘இன்றைய தினத்துக்குள் அனைத்துச் சாலைகளில் உள்ள போக்குவரத்து நெரிசல்களும் சரி செய்யப்படும்’’ எனவும் போலீஸார் கூறியுள்ளனர்.

- ஆ.நந்தகுமார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ