Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"டிராஃபிக் விதிகளை மீறுங்கள்; மரக்கன்று நடுங்கள்!" - டிராஃபிக் போலீஸின் விசித்திர தண்டனை

மூன்றே வாரங்களில், மாவட்டம் முழுவதும் குறைந்தது 2,765 செடிகள் நடப்பட்டு விட்டன. செடிகளை நட்டவர்கள் அனைவரும், ஏதோ இயற்கை விரும்பிகள் என்றோ, சமூக ஆர்வலர்கள் என்றோ நினைத்துவிடாதீர்கள். ஏதோ ஒரு விதத்தில் டிராஃபிக் விதிகளை மீறியவர்கள். ‘இந்த தண்டனை சரியானதுதானா? இது ஏற்றுக்கொள்ளக் கூடியது இல்லை’ என்று நல்லவேளையாக, நம் ஊரில் தொலைக்காட்சி விவாதங்கள் எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால், இந்த தண்டனை நம் ஊரில் இல்லை... தெலுங்கானா மாநிலத்தில். 

தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகரில்தான் இந்த விசித்திர தண்டனையை அறிவித்திருக்கிறது தெலுங்கானா போலீஸ் கமிட்டி. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட மெஹபூப் நகரில் மட்டும், கிட்டத்தட்ட 100 முதல் 120 பேர் டிராஃபிக் விதிமுறைகளை மீறுகிறார்களாம். ‘இவனை அடிச்சும் பார்த்தாச்சு; அவுத்தும் பார்த்தாச்சு’ என்று ‘வின்னர்’ படத்தில் வடிவேலுவைச் சொல்வதுபோல், அபராதம், சீஸிங் என்று என்னதான் தண்டனை கொடுத்தாலும், மக்கள் திருந்துவதாக இல்லை. நாளுக்கு நாள் டிராஃபிக் வயலேட்டர்கள் பெருகிக் கொண்டே வருகிறார்களாம். எனவேதான் இப்படிப்பட்ட ஓர் அதிரடியான முடிவை எடுத்திருக்கிறார், மெஹபூப் நகரின் மென்மையான சூப்பரிண்டென்ட் ரேமா ராஜேஸ்வரி. 

‘‘தெலுங்கானாவிலே அதிகமாக விபத்துகள் நடக்கும் இடம் மெஹபூப் நகர்தான். சில நேரங்களில் விபத்தில் உயிரிழந்தவர்களும் அதிகமாவது கவலை அளிக்கிறது. கொலை செய்தால்தான் குற்றவாளி என்றில்லை. டிராஃபிக் விதிகளை மீறுபவர்களும் குற்றவாளிகள்தான். இந்த மரம் நடுதல் என்பது குற்றவாளிகளை வைத்துச் செய்யப்படும் ஒரு சமூக சேவை. மரம் நடுதல் மனதை மென்மையாக்கும். தவறு செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைக் குறைக்கும். குற்றவாளிகளுக்கு மரம் நடுதல் போக, அபராதமும் உண்டு. ஏற்கெனவே தெலுங்கானா அரசாங்கம் மரம் வளர்த்தலில் அதிக அக்கறை கொண்டுள்ளது. தண்டனைக்குத் தண்டனையும் ஆச்சு; நல்லது நடந்தது மாதிரியும் ஆச்சு!’’ என்கிறார் ரேமா ராஜேஸ்வரி.

விரைவில், மெஹபூப் நகரைச் சுற்றி ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதுதான் காவல்துறையின் திட்டமாம்! 

நம் ஊரில் இரண்டே நாளைக்குள்  இந்த டார்க்கெட்டை அச்சீவ் பண்ணிடலாம்னு நீங்கள் சொல்வது கேட்கிறது.

- தமிழ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ