Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் முதல் பைலட் சகோதரிகள் ...சபாஷ் சிஸ்டர்ஸ்!

 

மர்யம் மசூத்(Maryum Masood), எர்யம் மசூத்(Erym Masood)... இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள்.  பாகிஸ்தான் அரசின் சர்வதேச விமான சேவையில் பைலட்டாகப் பணிபுரியும் அக்கா, தங்கை . சமீபத்தில் 'போயிங்(Boeing) 777' என்ற ஸ்பைக் ஜெட்டுக்கு இருவரும் ஒருசேர பைலட் வாய்ப்புப் பெற்று, 'உலகின் முதல் பைலட் சகோதரிகள்' என்ற சாதானைக்குச் சொந்தக்காரர்கள் ஆகியுள்ளனர்.

பாகிஸ்தான் விமான சேவையின் ஆய்வாளர் கிலானி, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் செய்தியைப்  பெருமையுடன் பகிர, உலகம் முழுக்க இணைய உலா வந்துகொண்டிருக்கிறார்கள் மர்யமும் எர்யமும். 

சீனியரான அக்கா மர்யமிடம் ஸ்பைஸ் ஜெட் இயக்குவதற்கான பைலட் உரிமம் வெகுநாட்களாகவே இருக்கிறது. சமீபத்தில் பயிற்சி முடித்து பைலட் உரிமம் பெற்ற தங்கை எர்யம், தன் அக்காவுடன் இணைந்து ஒரே விமானத்தில் பைலட் ஆகும் வாய்ப்பு தனக்கு இவ்வளவு விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 

பொதுவாக, 6, 12 மணி நேரப் பயணங்கள் கொண்ட விமானங்களில் ஒரு கேப்டன், ஒரு ஃபர்ஸ்ட் ஆபீஸர் என இரண்டு பைலட்கள் இருப்பார்கள். முதல் பாதி நேரத்துக்கு கேப்டனும், மறு பாதி நேரத்துக்கு ஃபர்ஸ்ட் ஆபீஸரும் விமானத்தை இயக்குவார்கள். அப்படித்தான் 'போயிங் 777' ஸ்பைஸ் ஜெட்டில் அக்கா மர்யம் கேப்டனாகவும், தங்கை எர்யம் ஃபர்ஸ்ட் ஆபீஸாராகவும் வாய்ப்புப் பெற்று, 'உலகின் முதல் பைலட் சகோதரிகள்' என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். 

போயிங் 777  மினி ஸ்பைஸ் ஜெட்,  450 பயணிகள் வரை பயணம் செய்யக்கூடியது. முழுக்க 'கேட் டிசைன்' என்று கூறப்படும் கம்ப்யூட்டர் டிசைன்களால் உருவாக்கப்பட்டது. இதை இயக்க, இந்த டிசைன் பற்றிய தெளிவான புரிதலும் தன்னம்பிக்கையும் சற்றே கூடுதலாகத் தேவை. மர்யம், இர்யம் இருவரும் பாகிஸ்தான் விமானச் சேவையில் பணிபுரிந்தாலும், ஒரே விமானத்தின் காக்பிட்டை(பைலட்களுக்கான இடம்) சக அலுவலர்களாகப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை அவர்களுக்குத் தந்தது, 'போயிங் 777'. லாகூர் முதல் கராச்சி வரை, நியூயார்க், லண்டன் என இந்த ஜெட்டில் பறந்துகொண்டிருக்கிறது இந்த 'மாற்றான்' கூட்டணி. 

சில வருடங்களாக இறங்குமுகத்தில் போய்க்கொண்டிருந்த பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் பெருமை,  இந்தச் சகோதரிகள் மூலமாக உலகின் கவனத்துக்கு வந்திருப்பதில் உற்சாகமாக இருக்கிறார்கள் அதன் ஊழியர்கள். 

பெண்களின் கல்விக்காக மலாலா போராடிய இதே பாகிஸ்தானில், இந்த பைலட் சகோதரிகளின் உலக சாதனை மகிழ்ச்சி தருகிறது.  

கலக்குங்க சிஸ்டர்ஸ்!  

  - எஸ். எம். கோமதி  (மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ