Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதி ஏழுமலையானுக்கு சிந்து அளித்த செம ஸ்வீட் காணிக்கை!

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து எடைக்கு எடை வெல்லம் காணிக்கை செலுத்தினார்.

பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனீரோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், பேட்மிண்டனில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதை தொடர்ந்து, நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்தன. அதை தொடர்ந்து ஐதராபாத்தின் சிம்ஹவாகினி மகான்காளி கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினார் பி.வி.சிந்து.

இந்நிலையில், திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பி.வி.சிந்து, அவரது தாய் விஜயா, தந்தை ரமணா மற்றும் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோர் நேற்று மாலை திருப்பதி வந்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்று முதலில் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்கு, பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். மேலும், லட்டு, தீர்த்த பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை கோவில் அதிகாரிகள் அவருக்கு வழங்கினர்.

அதன்பின் அவர், தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு வந்தனர். இரவில் அங்குள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர்கள் அனைவரும் ஓய்வு எடுத்தனர். இன்று காலை 4.30 மணிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பி.வி.சிந்து தனது குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

முன்னதாக ஏழுமலையான் கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் பி.வி.சிந்து, தனது எடைக்கு எடையாக (68 கிலோவிற்கு) வெல்லம் காணிக்கையாக செலுத்தினர். அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ‌தனது தலைமுடியைக் காணிக்கையாக செலுத்தினார். அதன் பின்னர் அவர்கள், வராக சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது பி.வி.சிந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ''ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன் திருப்பதி கோவிலுக்கு வந்தேன். ஏழுமலையானிடம் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஏழுமலையான் அருள் கிடைத்தததால், வெள்ளி பதக்கம் வென்றேன். அதனால் இப்போது திருப்பதிக்கு வந்து எனது நேர்த்திக்கடனை செலுத்தினேன்" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ