Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிரியரான குடியரசுத் தலைவர் : கடைசி உரை நிகழ்த்தி மரித்த ஆசிரியர் !

ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒரு நாள் ஆசிரியராக மாறி, பாடம் நடத்தினார். கேரளாவில் ஆசிரியத் தினத்தன்று,  மாணவ - மாணவிகளிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் மரணம் அடைந்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5–ந்தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பிறகு அரசியலில் ஈடுபட்டு நாட்டின் முதல் குடிமகன் ஆனவர். தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் அரசியலுக்கு வருவதற்கு முன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். எனவே , ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் மாணவ– மாணவிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாடம் எடுக்க வேண்டும் என டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்று, டெல்லியில் உள்ள ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பாடம் எடுத்தார். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளைச் சேர்ந்த 80 மாணவ–மாணவிகளுக்கு இந்திய அரசியல் வரலாறு குறித்தும், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் வளர்ச்சி குறித்தும்  குடியரசுத் தலைவர் பாடம் எடுத்தார். சுமார் ஒரு மணி நேரம் பாடம் நடித்திய  குடியரசுத் தலைவர்,  உலகம் எதிர்கொண்டு வரும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்தும் மாணவ–மாணவிகளுக்கு விளக்கினார். ஆசிரியர் தினத்தன்று நாட்டின் முதல் குடிமகன் தேசத்துக்காக கடமையாற்றியது குறித்து பெருமை கொள்ள வைத்திருக்கும் அதே தருணத்தில் கேரளாவில் மாணவ - மாணவிகளிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, முன்னாள் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டார்.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பங்கஜாக் ஷன் நாயர் ஆசிரியர் தினத்துக்காகவே  உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தாரோ என்னவோ தெரியவில்லை. தான் பணியாற்றிய பள்ளியிலேயே ஆசிரியர் தினத்தன்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே, மாரடைப்பால் உயிரை இழந்துள்ளார். கனியாபூரம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் பங்க ஜாக்சன் நாயருக்கு தற்போது 75 வயதாகிறது. கடந்த 1997ம் ஆண்டு தலைமை ஆசிரியராக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது மனைவி சாரதா மணியும் இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்தான்.

இந்த ஆண்டு ஆசிரியர் தினவிழாவுக்கு இந்த தம்பதியரை சிறப்பு விருந்தினராக கனியாபூரம் முஸ்லிம் பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியத் தம்பதியினரை பள்ளி நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அவர்களும் மகிழ்ச்சியுடன் விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டனர். ஓய்வு பெற்ற பிறகு, பல விஷயங்களுக்காக பங்கஜாக் ஷன் தான் பணிபுரிந்த பள்ளிக்கு வந்திருந்தாலும், எந்த ஒரு விழாவிலும் விருந்தினராக பங்கேற்றதில்லை. முதன்முறையாக சிறப்பு விருந்தினராக பங்கேற்பதால் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்.

விழாவுக்கு வந்த ஆசிரியர் தம்பதியினரை பள்ளி நிர்வாகிகள் வாசலில் நின்று வரவேற்றனர்.  மாலை மரியாதை செய்து மேடைக்கு அழைத்து சென்றனர். மேடையில் பங்கஜாக் ஷன்  உரையாற்றிக் கொண்டிருந்தார்.  அவரது  மனைவி சாரதா மணியும் மேடையில்தான் அமர்ந்திருந்தார்.  உணர்ச்சித்ததும்ப உரையாற்றிய பங்கஜாக் ஷனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்தார். உடனே அருகில் இருந்த சிஎஸ்ஐ மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். பங்கஜாக் ஷனை பரிசோதித்த மருததுவர்கள் வரும் வழியிலேயே  உயிர் பிரிந்து விட்டது என தெரிவித்து விட்டனர்.

தான் பணியாற்றிய பள்ளியிலேயே மாணவ-  மாணவிகளிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பங்கஜாக் ஷன் உயிர் பிரிந்தது கிராம மக்களுக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது. இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கற்றனர்.' எல்லோருக்கும் விரும்பியபடி மரணம் வாய்க்காது. பங்கஜாக் ஷனுக்கு அவர் விரும்பியபடியே மரணம் கிடைத்துள்ளது ' என கிராம மக்கள் கூறுகின்றனர்.

-எம்.குமரேசன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ