Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேத்திகளுக்கு அமிதாப் பச்சனின் உருக்கமான கடிதம்!

 

சிறு வயதில் அனைவரும் அனுபவித்து கொண்டாடியது தாத்தா பாட்டியின் பாசம் தான். நாம் டி.வி. பார்த்துக் கொண்டே தூங்கிய பின் நம்மை படுக்கைக்கு தூக்கி சென்று விடுவதில் தொடங்கி, நாம் செய்தச் சேட்டைக்காக அம்மா அடிக்க வரும் போது "சின்ன குழந்தைய போய் அடிக்க வர்ற... குழந்தைன்னா சேட்டை செஞ்சிட்டு தான் இருக்கும்" என நம்மை காப்பாற்றுவது வரை நம் குழந்தை பருவத்தின் இணைப்பிரியா நண்பர்களாக இருந்தவர்கள் தாத்தாவும் பாட்டியும்தான். தாத்தா பாட்டியின் பாசத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

தன் பேத்திகள் மேல் அப்படிப்பட்ட சிறந்த பாசத்தை வைத்துள்ள உலக புகழ் நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் தன் பாசத்தை தன் பேத்திகளுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறார். மிக உருக்கமான அக்கடிதத்தை இணைய தளம் மூலம் வெளியிட்ட அவர், தான் அக்கடித்ததை படிக்கும் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார். வீடியோவில் அக்கடிதத்தை அவர் வெளியிட்ட காரணத்தை அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்திலிருந்து...

"என் பாசத்திற்குரிய நவ்யா மற்றும் ஆராத்யாவிற்கு,

நீங்கள் இருவரும் ஒரு பெரிய மரபை உங்கள் தோள்களில் சுமந்து செல்லப் போகிறீர்கள். ஆராத்யா நீ திரு. ஹரிவன்ஷ் பச்சனின் பரம்பரைக்கும், நவ்யா, நீ திரு. எச்.பி. நந்தாவின் பரம்பரைக்கும் பிரதிநிதிகளாக இருக்கப் போகிறீர்கள். உங்களுக்கு இன்று கிடைத்திருக்கும் பரம்பரை பெயர், புகழ் எல்லாம் இவர்கள் இருவரும் கொடுத்தது தான்.

ஆனால் பரம்பரை பெயர் அல்லாது உங்களுக்கு கிடைத்த மற்றொரு முக்கியமான அங்கீகாரம் என்ன தெரியுமா? நீங்கள் பெண்கள் என்பது தான்.

நீங்கள் பெண்கள் என்பதால், சமுதாயம் உங்கள் சிந்தனையில் அடிக்கடி தலையிடும். உங்களுக்கான எல்லைகளை உங்களுக்குத் தெரியாமலே வகுக்க நினைக்கும். நீங்கள் என்ன ஆடை அணிய வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், எங்கு செல்ல வேண்டும் போன்ற பல விதிமுறைகளை வகுக்கும். என்றும் அது நீங்கள் செய்த தவறு என்று கருதாதீர்கள்.  சமூகம் பெண்கள் மீதுக் கொண்ட தவறான பார்வையது.

 

உங்களைப் பற்றிய மற்றவர்களின் எண்ணத்தின் நிழலில் என்றும் வாழாதீர்கள். இது உங்கள் வாழ்க்கை. உங்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும், உங்கள் அறிவின் ஒளியிலிருந்தும் முடிவுகளை எடுங்கள். நீங்கள் யாருடன் நண்பராக இருக்க வேண்டும் என்பதை மற்றவர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடாதீர்கள். அது உண்மையான நட்பாக இருக்காது.

நீங்கள் அணியும் ஆடையின் அளவு தான் உங்கள் பகுத்தறிவின் அளவு என்ற மிகக் கீழ்த்தரமான எண்ணத்தை இந்த சமூகம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதை உடைத்தெறியுங்கள்.


திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். அது வரை யாருக்காகவும் எதற்காகவும் திருமணம் செய்துக் கொள்ளாதீர்கள். மனிதர்கள் பேசிக் கொண்டு தான் இருப்பார்கள். பேசினால் தானே மனிதர்கள்? பேசுகிறார்கள் என்பதற்காக அவர்கள் கூறுவதைக் கேட்டு கொண்டிருக்க முடியாது.

"நம்மள பத்தி உலகம் என்ன நினைக்கும்?" இதைப் பற்றி நீங்கள் நினைக்க வேண்டாம். நீங்கள் செய்யும் செயல்களின் பலனை அனுபவிக்கப் போவது நீங்கள் தான். எனவே, உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.

நவ்யா,

உன் பரம்பரை உனக்கு கொடுக்கும் பெருமை, பெண் என்பதால் நீ படப்போகும் கஷ்டங்களில் இருந்து உன்னை பாதுகாக்கப் போவதில்லை.

ஆராத்யா,

நீ இதை படித்து புரிந்துக் கொள்ளும் போது நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால் அன்று கூட இது உனக்கு தேவைப்படும். இது பெண்ணாக வாழ மிக மிக கடினமான உலகம். உங்களை போன்ற பெண்கள் அதை மாற்ற வேண்டும். உங்களுக்கான முடிவுகளையும் எல்லைகளையும் நீங்களே வகுப்பது சுலபமாக இருக்காது. ஆனால் நீங்கள் அதையெல்லாம் தாண்டி மக்களுக்கு ஒரு உதாரணமாக விளங்குங்கள்.

நீங்கள் இதைச் செய்து விட்டால் தாத்தாவை விட பெரிய சாதனையை செய்து விட்டீர்கள் என்று பொருள். என் பேத்திகள் நீங்கள் என்பதை தாண்டி, உங்கள் தாத்தா நான் என்ற பெருமையை எனக்கு தேடித் தாருங்கள்.

அன்புடன்,
தாத்தா."

- ம. சக்கர ராஜன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ