Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கனத்த இதயத்துடன் தண்ணீர் திறக்கப்படும்!'- சித்தராமையா

பெங்களூரு: உச்ச நீதிமன்ற உத்தரவை மீற முடியாது. அதனால், கனத்த இதயத்துடன் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலம் மண்டியா, மைசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு பேருந்து போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக பெங்களூரு விதான செளதாவில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டியதின் அவசியம் மற்றும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீரை திறக்காவிட்டால் உண்டாகும் சட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்திற்கு பின் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தினமும் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மாநில அரசு பின்பற்ற வேண்டும். அதன்படி, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ஏற்கெனவே 33 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட்டுள்ளோம். கர்நாடகத்தில் மழையில்லாததால் அணைகள் வறண்டுள்ளன. ஆனாலும், நீதிமன்ற உத்தரவை ஏற்று, கனத்த இதயத்துடன் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

அதேபோல், கர்நாடக விவசாயிகளுக்கும் தண்ணீர் திறக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான குடிநீரும் வழங்கப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மீற முடியாது. அந்த உத்தரவை பின்பற்றியே ஆக வேண்டும். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் கூறிய ஆலோசனைப்படி உடனடியாக காவிரி மேற்பார்வை குழுவை அணுகவும் தீர்மானித்து உள்ளோம். அதனால், கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதி காக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காமல் இருக்கும்படி விவசாயிகளை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகி கர்நாடகத்தின் நிலைமையை விளக்கி, சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். அதுமட்டுமன்றி, காவிரி மேற்பார்வைக் குழுவை அணுகி மாநிலத்தின் நிலைமையை விளக்கவும் முடிவு செய்துள்ளோம்" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ