Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மோடி அரசு விவசாயிகளை...!' - ராகுல் காந்தி

கோரக்பூர்: மோடி அரசு விவசாயிகளை திண்டாடவிட்டுள்ளது வேதனையளிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு ஆட்சியை இழந்த நிலையில், மீண்டும் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சித் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், விவசாயிகள் பிரச்னையை முன்னெடுக்கும் விதமாக, 'விவசாயிகள் மகா யாத்திரை'யை தொடங்கி மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கோரக்பூர் நகரில் அவர் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, ''மத்தியில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 2 ஆண்டுகளாக தொழிலதிபர்கள், பெரு முதலாளிகள் ஆகியோர் வாங்கியிருந்த கடன் தொகையான ரூ.1.10 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

தொழிலதிபர்களின் பிரச்னையைப் பற்றி சிந்திக்கும் பிரதமர் மோடி, விவசாயிகள் படும்பாடு குறித்து சிந்திக்க மறந்துவிட்டார். பெரு முதலாளிகளின் கடன்களை நீங்கள் தள்ளுபடி செய்ய விரும்பினால் அப்படியே செய்துகொள்ளுங்கள், அதற்கு நாங்கள் எதிராக இருக்கவில்லை. ஆனால், பெரு முதலாளிகளுக்கான அரசாக மத்திய அரசு செயல்படக் கூடாது என்பதுதான் நாங்கள் விடுக்கும் ஒரே கோரிக்கை.

பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் நீர்பற்றாக்குறை, கடன் சுமை மற்றும் உர தட்டுப்பாடு காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிகின்றன. தற்போதைய சூழ்நிலையில் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. அதனால் விவசாயிகளின் குறைகளை நேரடியாக தீர்க்க முடியவில்லை. இருப்பினும் விவசாயிகள் போராட்டம் மூலம் தங்களின் குரலை உயர்த்த வேண்டும்

மேலும், ஏழைகளின் நலன்களுக்காக மத்திய அரசு செயல்பட வேண்டும். தொழிலதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் நீங்கள் (மோடி), ஏன் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது? மோடி அரசு விவசாயிகளை திண்டாடவிட்டுள்ளது வேதனையளிக்கிறது" என்றார்.

 

எடிட்டர் சாய்ஸ்