Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காங்கிரஸ் ஆட்சிக்கு அயோத்தி அனுமாரை வழிபட்ட ராகுல் காந்தி!

அயோத்தி: உத்தரபிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையவேண்டி அயோத்தியில் உள்ள அனுமார் கோயிலுக்கு சென்று ராகுல் காந்தி விசேஷ பூஜைகள் நடத்தி வழிபட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 29 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ராமர் கோயில் விவகாரம், மண்டல் கமிஷன் பரிந்துரைகளால் ஏற்பட்ட அரசியல் மாற்றம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எழுச்சி ஆகிய காரணங்களால் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி, அங்கு மீண்டும் ஆட்சியமைக்க முடியாமல் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திணறி வருகிறது .கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிட்ட 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், எப்படியாவது மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, ராகுல் காந்திக்கு பிரபல தேர்தல் பிரசார ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை கொடுத்து வருகிறார். இதன் முன்னோட்டமாக தியோரியா முதல் டெல்லி வரை விவசாயிகளை சந்திக்கும் 2,500 கி.மீ. ஒரு மாத கால மெகா யாத்திரையை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொடங்கி உள்ளார்.

கடந்த வாரம் மெகா யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, அயோத்தி நகருக்கு நேற்று வந்தார். முதலில், சீக்கியர்கள், ஹிந்து சாதுக்கள் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு செயல்படும் 'அகில இந்திய அகாரா பரிஷத்' என்ற அமைப்பின் உறுப்பினர் மஹந்த் ஞானதாஸை சந்தித்து ராகுல் காந்தி ஆசி பெற்றார். அதன் பின்னர் அவர் அங்குள்ள அனுமான் கர்ஹி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பலத்த பாதுகாப்புக்கு இடையே அவர் கோயிலின் பின்பக்க வாசல் வழியாக கோயிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

வெள்ளை குர்தா, பைஜாமா அணிந்திருந்த ராகுல் காந்தியை, கோயில் தலைமை குரு கியான்தாஸ் வரவேற்று அழைத்துச் சென்றார். கோயிலில் ராகுல்காந்தி சிறிது நேரம் பக்தி பாடல்களை பாடி வழிபாடும் செய்தார். அப்போது, விசேஷ பூஜையும் அவருக்காக நடத்தப்பட்டது. ஆனாலும், அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில், ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 1989-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய இடத்துக்கு ராகுல் காந்தி செல்லவில்லை.

அனுமான் கோயிலுக்குச் சென்று திரும்பிய பிறகு, முஸ்லிம் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் வகையில், கிசெளசா ஷெரீஃப் தர்காவுக்கும் சென்று ராகுல் வழிபட்டார். பின்னர், ஃபைசாபாதில் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், ஆச்சார்யா நரேந்திர தேவ் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்த ராகுல் காந்தி, அயோத்தி நகரின் வீதிகளில் காரில் சென்றபடி மக்களைச் சந்தித்தார்.

இதனிடையே, ராகுல் காந்தியின் அனுமான் கோயில் தரிசனம் அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரும், அயோத்தியில் உள்ள சில சாதுக்கள் அமைப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், 'ராமரை விட்டு விட்டு அனுமானை மட்டும் தரிப்பதால் முழுமையான பலன் கிடைக்காது' என்றும் கூறி உள்ளனர்.

அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், கடந்த 24 ஆண்டுகளில் அங்கு சென்ற நேரு குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைவர் ராகுல் காந்திதான். இதற்கு முன்பாக அவருடைய தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி கடந்த 1990-ம் ஆண்டு அயோத்தி சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close