Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்..!' சித்தராமய்யா

காவிரி விவகாரத்தில் கர்நாடாகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்று கூறிய கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதித்து நடக்கும் என்றார்.

காவிரி பிரச்னை தொடர்பாக கர்நாடகாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், முதல்வர் சித்தராமய்யா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம் என்றும், பிரதமர் மோடியை நாளை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சந்திப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமய்யா, காவிரி விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தீர்க்கமாக ஆலோசனை நடத்தப்பட்டது. பெங்களூருவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து விவாதித்தோம். வன்முறையை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். காவிரி விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விவாதம் நடத்தி முடித்துள்ளோம்.

தொடக்கத்தில் இருந்தே நீதிமன்ற தீர்ப்பை கடைபிடித்து வருகிறோம். தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் மதித்துதான் ஆக வேண்டும். 15 டிஎம்சி தண்ணீர் விட உத்தரவிட்டால் அதை நடைமுறைப்படுத்தத்தான் வேண்டும். காவிரி விவகாரத்தில் கர்நாடாகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்புதான். தீர்ப்பின் சாதக, பாதகங்களை மேல்முறையீட்டில் எடுத்துரைப்போம். நீதித்துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்.

பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ள கூடாது. மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். உயிரிழப்புகளை ஏற்படுத்தும் செயல்களில் யாரும் ஈடுபடவோ, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ வேண்டாம். தவிர்க்க முடியாத சூழலில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

வெளியில் இருந்து மாநிலத்திற்கு வருவோருக்கும், இங்கே இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்போம். கர்நாடகாவில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. காவல்துறையும், அரசும் மக்களுக்கு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இருக்கும். பிறமொழி பேசும் மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கன்னட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஜெயலலிதாவும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். இருமாநிலங்களுக்கு இடையே நல்லுறவு நிலவ வேண்டும். தமிழகத்திற்கு நீர் திறந்து விட்டாலும் பெங்களூரு, மைசூரு, மாண்டி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. குடிநீர் விநியோகம் சீராக இருக்கும் என உறுதி அளிக்கிறேன். பிரதரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அப்போது, காவிரிப் பிரச்னையில் சுமுகத்தீர்வு காணப் பேச்சு நடத்துமாறு பிரதமரிடம் வலியுறுத்துவோம்" என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ