Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பெங்களூரில் இனி எந்தப் போராட்டத்துக்கும் அனுமதியில்லை!' - மாநகரக் காவல் ஆணையர்

பெங்களூரு: பெங்களூரில் இனி எந்த போராட்டத்தையும் அனுமதிக்கப் போவதில்லை என்று மாநகரக் காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திற்கு காவிரியில் 10 நாட்களுக்கு தினமும் 15 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 5–ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கடந்த 9–ம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதை ஏற்ற உச்ச நீதிமன்றம், தீர்ப்பில் திருத்தம் செய்து தினமும் 15 ஆயிரம் கனஅடி என்பதை 12 ஆயிரம் கன அடியாக குறைத்து 20–ம் தேதி வரை தண்ணீரை திறக்கும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு கர்நாடக அரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதையடுத்து பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை போராட்டங்கள் வெடித்தன. கலவரம் மூண்டது. போராட்டக்காரர்கள் பேருந்துகள் மற்றும் லாரிகளை தீ வைத்து கொளுத்தினர். இதனால் நகரில் பதற்றமான சூழல் நிலவியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் மரணம் அடைந்தார். 2 பேர் காயம் அடைந்தனர். போலீசாரின் தடியடிக்கு பயந்து ஓடியபோது மாடியில் இருந்து கீழே விழுந்து இன்னொருவர் மரணம் அடைந்தார்.

இதனால் பெங்களூருவில் ராஜாஜிநகர் உள்பட 16 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும், கலவரத்தில் ஈடுபடுகிறவர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது. நகரம் முழுவதும் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டதால் நிலைமை சற்று கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பெங்களூரு மாநகரக் காவல் ஆணையர் என்.எஸ்.மேக்ரிக் கூறும்போது, ''காவிரிப் பிரச்னை காரணமாக பெங்களூரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 350 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கையின் காரணமாக தற்போது பெங்களூரில் அமைதி திரும்பி உள்ளது. இதை தொடர்ந்து மாநகரில் 16 காவல் நிலையங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. ஆனாலும், பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

அதனால், பெங்களூரில் இனி முழு அடைப்பு, ஊர்வலம் உள்ளிட்ட எந்த வகையான போராட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. மேலும், வியாழக்கிழமை (செப்.15) நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள ரயில் மறியல் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதே நேரம், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம். தமிழர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். பெங்களூரில் நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது.

தமிழகத்தில் செப்டம்பர் 16-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால் எல்லைப் பகுதியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து மத்திய பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ