Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கவுன்சிலர் கோகிலா மர்ம மரணம்! - தகிக்கும் கொல்லம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பா.ஜ.க. கவுன்சிலராக இருந்த கோகிலா என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்து மோதிய வாகனம் நிற்காமல் மறைந்ததால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்கிற சந்தேகம் தற்போது எழுந்து உள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் கோகிலா. 23 வயதே நிரம்பிய அவர், கொல்லம் மாநகராட்சியின் கவுன்சிலராக தேர்வானதன் மூலம், கேரளாவில் மிகச்சிறிய வயதில் கவுன்சிலரானவர் என்கிற பெருமையை பெற்றார் கோகிலா. கொல்லம் அருகில் உள்ள சக்திகுளங்கரா தர்மசாஸ்தா கோவிலில் நேற்று முன்தினம் இரவு குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் ஓணம் திருவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கோகிலா கலந்துகொண்டார்.

இந்த விழாவுக்காக தந்தையுடன் சென்ற அவர், தனது இருசக்கர வாகனத்தில் இரவு 10 மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காவநாடு பகுதியில் பதிஞ்சாரா கொல்லம் அருகே அல்தாரமூடு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கோகிலா தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று, அவரது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில், கோகிலாவும் அவரது தந்தை சுனில்குமாரும் தூக்கி வீசப்பட்டனர்.

உடனடியாக இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, கொல்லம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், கோகிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய சுனில்குமார், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, ''தேசிய நெடுஞ்சாலையில் கோகிலாவின் இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து மிகவும் வேகமாக ஒரு கார் வந்து கோகிலாவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அந்த காரில் இருந்தவர்கள் இதனை பார்த்த பின்னரும், உதவிக்காக காரை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தனர். மோதிய கார் வேகமாக வந்ததுடன் மோதிய வேகத்திலேயே தப்பிச் சென்றதை பார்க்கும்போது, இது திட்டமிடப்பட்ட விபத்தாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது" என்றார்கள்.

இதனிடையே, கோகிலாவை கடந்த மூன்று நாட்களாகவே ஒரு காரில் மூன்று இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்று, அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்ட தகவலும் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த அன்றும் அந்த காரில் இருந்தவர்கள், கோகிலா கிளம்பிய பின்னரே அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். கோகிலா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வரையிலும் காத்திருந்த அவர்கள், அதன் பிறகு பின் தொடர்ந்து சென்று திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் கிளப்பி உள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதனை சாலை விபத்து என்று முதலில் வழக்கு பதிவு செய்து இருந்தனர். ஆனால், அப்பகுதி மக்களிடம் பேசியதுடன், சாலை விபத்தை நேரில் பார்த்த மக்களிடம் விசாரித்த பின்னர் இதனை கொலை வழக்காக தற்போது மாற்றி உள்ளனர். அத்துடன், இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் சகதிக்குளக்கரா என்கிற இடத்தில் உள்ள ஒரு வீட்டின் அருகில் அனாதையாக நிறுத்தப்பட்டு இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த வாகனத்தின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள போலீசார், அதில் இருந்த மூன்று இளைஞர்களை தீவிரமாக தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த கோகிலா?

மறைந்த கோகிலாவுக்கு சிறு வயதில் இருந்தே அரசியலில் ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் இருந்துள்ளது. அவரது தாய் ஷைலஜா. தந்தை சுனில்குமார் அரசு ஊழியர். இவர் பரவூர் பகுதியில் உள்ள தீ தடுப்பு மற்றும் மீட்புப்பணி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். கோகிலாவுக்கு கார்த்ஹ்டிகா என்ற தங்கை உள்ளார். இவர் பி.எஸ்.சி படித்து வருகிறார். சபரி என்கிற தம்பி 9-வது வகுப்பு படித்து வருகிறார். கோகிலா கொல்லத்தில் உள்ள மவுண்ட் கார்மெல் கான்வெண்ட் மகளிர் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், எஸ்.என். மகளிர் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்தவர்.

அப்போது, மாநகராட்சிக்கு தேர்தல் வந்தபோது இவரை தேர்தலில் களமிறக்கியது, பாரதிய ஜனதா. வார்டு தேர்தலில் இவர் சுலபமாக வெற்றி பெற்றார். இந்த தேர்தலின்போது பிரசாரத்துக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, கோகிலாவை தனிப்பட்ட முறையில் பாராட்டி சென்றார். வார்டு கவுன்சிலராக இருந்த போதிலும், கோகிலா தனது படிப்பை தொடர்ந்து வந்தார். கார்மேல் ராணி பயிற்சிக் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.

சமூக சேவையில் கோகிலாவுக்கு அக்கறை இருந்ததால், மக்களுக்கான பிரச்னைகளில் ஆர்வத்துடன் அவர் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, கோகிலா தனது 23-வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். அப்போது, கொல்லத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு உணவுவும் வழங்கி உள்ளார் கோகிலா. அடுத்த சில மாதங்களிலேயே, அதே மருத்துவமனையிலேயே கோகிலாவின் உயிர் பிரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கோகிலாவின் மரணம் கேரள மாநில பா.ஜ.க. வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

- ஆண்டனிராஜ்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

MUST READ