Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவிரிக்கான வன்முறை அல்ல... கொள்ளைக்காக நடந்த களேபரம்..! பெங்களூரு அதிர்ச்சி

காவிரியால் ஏற்பட்ட கலவரம் இன்னும் ஓயவில்லை. இன்று கூட தமிழகத்தில் அ.தி.மு.க.வைத் தவிர இதரக்கட்சிகள் முழுஅடைப்பு (பந்த்) போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து கட்சித் தலைவர்கள், தொண்டர்களுடன் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றாலும் நேற்று (15.9.16) நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விக்னேஷ், தீக்குளித்து மரணமடைந்தார். இவ்வாறு காவிரிக்காக தமிழகத்தில் தீவிரமாக போராட்டம் நடந்து வருகிறது. இதுபோல கர்நாடகாவில் நடந்த போராட்டம் கலவரமானது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். அதோடு இரண்டு மாநிலங்களிலும் லட்சக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளன. 

இந்த அடங்காத கலவரத்தைப் பயன்படுத்தி கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த கும்பல் கொள்ளையடித்த சம்பவம் சி.சி.டி.வி ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. காவிரி பிரச்னையைத் தங்களுக்கு சாதகமாக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பயன்படுத்தியிருப்பதாக உள்விவரம் தெரிந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் சொன்ன தகவல் அதிர்ச்சிகரமானது.

"காவிரிக்காக கர்நாடகத்தில் நடந்த போராட்டத்தில் பெங்களூருவில் பல வணிக நிறுவனங்கள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அப்போது அந்த சம்பவங்கள் கலவரம் என்றே கருதப்பட்டது. கலவரத்தின் போது சில வணிக நிறுவனங்கள் மட்டும் குறி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் இப்போதுதான் தெரியவந்துள்ளது. குறிப்பாக கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் சிலருக்கும் முன்பகை இருந்தது தெரியவந்துள்ளது. சில அமைப்புகள் கேட்ட பணத்தை பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கொடுக்கவில்லை. இதற்காக அந்த நிறுவனங்கள், அவர்களது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவம் சேதப்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்களிலிருந்த சி.சி.டி.வி கேமரா மூலம் அம்பலமாகியுள்ளன என்றவர்கள், கேமராவில் பதிவான காட்சிகளை விளக்கினர்.

'கத்தி, அரிவாள், துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வரும் கும்பல்  வணிக நிறுவனத்துக்குள் நுழைகின்றனர். பிறகு அவர்கள் நிறுவனத்தின் உரிமையாளரை சந்தித்து பேரம் பேசுகிறார்கள். அப்போது கடையை சேதப்படுத்தாமலிருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை தங்களுக்குத் தர வேண்டும் என்று கேட்கின்றனர். அதற்கு உரிமையாளர் ஒத்துக் கொண்டதால் நிறுவனத்தை சேதப்படுத்தாமல் அங்கிருந்து வெளியேறுகிறது கும்பல். பணம் கொடுக்காத நிறுவனங்களை குறி வைத்து சேதப்படுத்துகிறது அந்த கும்பல். பெங்களூருவில் உள்ள ஒரு மளிகை பொருள் விற்கும் நிறுவனத்துக்கு சென்ற கும்பல், அங்கிருந்த பொருட்களை மூட்டை, மூட்டையாக கட்டி வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் காட்சிகளும் சி.சி.டி.வி.யில் பதிவாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது' என்றனர்.

இது குறித்து கர்நாடகா போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "கர்நாடகா கலவரத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கலவரத்தின் போது பதிவான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை சேகரித்து அதை ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 250 பேரை கைது செய்துள்ளோம். இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடி வருகிறோம். கலவரத்தைப் பயன்படுத்தி சில கும்பல்கள் ஆதாயம் அடைந்ததற்கான தகவல் எங்களுக்கு இதுவரை வரவில்லை. அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் எங்களிடம் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். மேலும் கர்நாடகாவில் வணிக நிறுவனங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை" என்றார்.

இது தொடர்பாக போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தால், "சமீபத்தில் நடந்த விநாயகர் சதூர்த்தியின் போது கூட வணிக நிறுவனங்களிடம் நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது பணம் கொடுக்காத வணிக நிறுவனங்கள் இந்த கலவரத்தின் போது கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளன. பணம் கேட்டு மிரட்டும் கும்பலுக்குப் பின்னணியில் அரசியல் செல்வாக்கு உள்ளது. இதற்குப் பயந்து பாதிக்கப்பட்டவர்கள் போலீஸில் புகார் கொடுப்பதில்லை. மேலும் போலீஸில் புகார் கொடுத்தாலும் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இதில் அரசும் தலையிட்டால்  மட்டுமே பணம் மிரட்டிப்பறிக்கும் கும்பல் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க முடியும்" என்றனர். 

நமது நிருபர்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்பவர்களின் கவனத்துக்கு..! 

MUST READ