Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

17 வீரர்களை பலி கொண்ட தாக்குதல்...! பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை

காஷ்மீரில் உள்ள ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம், உரியில் உள்ள இந்திய ராணுவத்தின் டோக்ரா படைப்பிரிவின் நிர்வாகத் தலைமையகம் உள்ளது. இங்கு உள்ள ராணுவவீரர்கள் 17-ம் தேதியன்று பணியை முடித்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். 18-ம் தேதி அதிகாலையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கின்றனர். வெடிகுண்டுகளை வீசியபடி சரமாரியாகச் சுட்டனர். ராணுவ முகாமின் கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன, முகாமில் இருந்த இந்திய வீர ர்கள் சுதாரித்துக் கொண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது பதிலடித் தாக்குதல் தொடுத்தனர். இதில், இந்திய வீரர்கள் 17 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆயுதங்களில் பாகிஸ்தான் முத்திரை

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுங்களில் பாகிஸ்தானின் ராணுவ முத்திரை இருப்பதாகத் தெரியவந்துள்ளது. தாக்குதலின் போது தானியங்கி துப்பாக்கிகள், ஃபிளேம் த்ரோவர் (நெருப்பு கக்கும் துப்பாக்கி) வகை துப்பாக்கிகளையும் பயன்படுத்தியுள்ளனர், எனவே, தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் ராணுவவீரர்களாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பாகிஸ்தான் உளவுப்பிரிவு சதி

தாக்குதல் நடந்த இடத்தை ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், ராணுவத் தளபதி தல்பீர் சிங் சுகாக் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, ராணுவ தளபதி கூறுகையில், "இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவுப்பிரிவு பின்னணயில் இருந்திருக்க வேண்டும். இந்த நாசவேலையில் ஈடுப்பட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து சலமாபாத் கால்வாய் வழியாக உரி ராணுவ முகாமுக்கு வந்திருக்கின்றனர்" என்றார்.

தக்க பதிலடி கொடுக்கப்படும் - மோடி!

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். "பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன், இந்த கொடிய தாக்குதலில் ஈடுபட்ட கோழைகள் யாராயினும் தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்றார்.
காஷ்மீரில் தாக்குதல் நடத்தி கலவரங்களைத் தூண்டி போர்க்கால நடவடிக்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இந்த கொடூர செயலை பயங்கரவாதிகள் செய்துள்ளனர், ஏற்க்கனவே வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தற்போது பயங்கரவாதிகளின் இது போன்ற கொடூர தாக்குதல்களையும் தாங்க வேண்டியுள்ளது என்றார். காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மிகப்பெரிய தாக்குதல்கள்

கடந்த 2002-ம் ஆண்டு கலுச்சக் பகுதியில் உள்ள ராணுவக் குடியிருப்பு பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 30 பேர் கொல்லப்பட்டனர், அதன் பிறகு 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இதேபகுதியில் மொக்ரா எனுமிடத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியபோது 10 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். அதன்பிறகு கடந்த ஜனவரி மாதம் பஞ்சாபின் பதன்கோட்டில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 வீரர்கள் பலியாகினர்.


-ஜெ.அன்பரசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ