Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரி செலுத்தாத திருப்பதி தேவஸ்தானமும்... அருண் ஜெட்லியும்!

 

ந்தியாவின் மிக முக்கியத் திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்று. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திருப்பதியில், தேவஸ்தானத்துக்குச் சொந்தமாக நிவாசம், விஷ்ணு நிவாசம், மாதவம், கோவிந்தராஜ போன்ற சத்திரங்கள் உள்ளன. இதற்காக தேவஸ்தானம், ஆண்டுதோறும் திருப்பதி நகராட்சிக்குச் சொத்துவரி செலுத்த வேண்டும். ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக தேவஸ்தானம் வரி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால், வட்டியுடன் சேர்த்து வரி பாக்கி, ரூ.39 கோடியாக உயர்ந்துள்ளது.

‘‘தேவஸ்தானம், பக்தர்களுக்குச் சேவை செய்யும் நிறுவனம் என்பதால், சொத்து வரி செலுத்தத் தேவையில்லை’’ என தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். அதனால், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் திருப்பதி நகராட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘‘தேவஸ்தானம், சேவை நிறுவனமாக இருந்தாலும், பக்தர்களிடம் வாடகை வசூலிக்கிறது. எனவே, நகராட்சிக்கான வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டது.

இதுபற்றி அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் திருப்பதி நகராட்சிக்கான வரியைச் செலுத்தும்படி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டார். ஆனாலும், தேவஸ்தானம் வரி செலுத்த மறுத்து வருகிறது. இதனால், திருப்பதியில் நடந்துவரும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த, முறையாக வரி செலுத்தும் மக்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டு பேசினார். அதில், ‘‘பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக வருமானவரி செலுத்தும் நடைமுறையைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் அவ்வாறு வருமானவரி செலுத்துபர்களைக் கண்டறிந்து கெளரவிக்க வேண்டும். அவர்களைப் பார்த்து வரி ஏய்ப்புச் செய்ய நினைக்கும் மக்களின் மனநிலை மாறும். இந்தியாவில் நேர்மையாக வரி செலுத்துபவர்களின் பங்களிப்பு, சமூகத்துக்கு மிகப்பெரியது. உரிய காலத்துக்குள் அவர்கள் வருமானவரியைத் தாக்கல் செய்வதும், சரியாக வரி செலுத்துவதும் பாராட்டுக்குரியது’’ என்று அவர் பேசியது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ