Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எய்ம்ஸ் சரவணனின் மரணம் - 'தற்கொலை கொலையே'! பின்னணி என்ன?

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் கல்லூரி விடுதியில் கடந்த ஜூலை 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்துகிடந்தார். தனது மகன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சரவணனின் தந்தை புகார் கூறி வந்தார். 
 

கனவுப் படிப்பு 

எய்ம்ஸ் மருத்துவமனையில் பொது மருத்துவத்தில் பட்டமேற்படிப்புப் படிக்க விரும்பி நுழைவுத் தேர்வு எழுதிய சரவணனுக்கு, 74-வது ரேங்க் கிடைத்தது. இதனால், பேத்தாலஜி பிரிவில் படிக்கும் வாய்ப்புதான் கிடைத்தது. எனவே, மீண்டும் நுழைவுத்தேர்வு எழுதினார். இந்த முறை 47-வது ரேங்குடன் பொது மருத்துவம் படிக்கும் கனவைத் தொடங்கினார். ஆனால் அது நிறைவேறாத கனவாக முடிந்துவிட்டது. 

கொலை என சந்தேகம்

சரவணன் மர்ம மரணம் குறித்து விசாரித்த டெல்லி போலீஸார் இது தற்கொலைதான் என உறுதியாகக் கூறினர். ஆனால் சரவணனின் நண்பர்களும், சில எய்ம்ஸ் மாணவர்களும் திட்டவட்டமாக இது தற்கொலை அல்ல என்று கூறிவந்தனர். சரவணன் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வலது கைப் பழக்கமுள்ள சரவணன், இடது கையால், வலது கையில் ஊசியைச் செலுத்தி இருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறினர். 

சந்தேகம் தீர்ந்தது
ஆரம்பத்திலிருந்தே சரவணன் மரணத்தில் சந்தேகமும் குழப்பமும் இருந்து வந்த நிலையில் ஒன்றரை மாதம் கழித்து சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சரவணன், விஷ ஊசி போட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரவணன் தனக்குத் தானே விஷ ஊசியைப் போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை. யாரோதான் அவருக்கு விஷ ஊசியைப் போட்டிருக்கிறார்கள். தேர்ச்சி பெற்ற ஒருவர்தான் ஊசியைப் போட்டிருக்கக் கூடும். மருத்துவ அறிவு உள்ளவர்தான் இந்த கொலையை செய்திருக்க க் கூடும் என்று போலீஸார் நம்புகின்றனர். 
 

கொலைக்குக் காரணம் இதுதானா?
இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சரவணனின் தந்தை கூறிவந்தார். "எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவப் பட்டமேற்படிப்புக்கு எப்போதுமே டிமாண்ட் உள்ளது. இங்கே படிக்க பலரும் தவம் கிடக்கிறார்கள். சரவணனின் சீட்டு காலியாகிவிட்டது. அவரது இடத்தில் இன்னொருவர் சேருவதற்காகவே இந்த கொலை நடந்திருக்கலாம்" என்றும் சரவணனின் தந்தை கூறி இருந்தார். இப்போது அந்த சந்தேகம் வலுப்பட்டுள்ளது. இனியாவது விசாரணையில் தீவிரம் காட்டி கொலையாளியைக் கண்டுபிடிக்குமா டெல்லி போலீஸ் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- ஜெ.சரவணன்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ