Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்காவை அழைக்கிறது பாகிஸ்தான் - என்னவாகும் காஷ்மீர் விவகாரம் ?

 

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே வருடக் கணக்கில் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான புர்ஹான் வானியை இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்கள் கடந்த ஜூலை 8-ம் தேதி  சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட கலவரங்களை அடக்குவதற்காக எல்லைப் பாதுகாப்புப் படை நடத்திய தொடர் தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிர்பலி ஆனதோடு ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில், தடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளால் பயன்படுத்தப்பட்டதால், பலருக்கு கண்கள் குருடாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் ராணுவ முகாம் மீது நடத்திய திடீர் தாக்குதலில் பதினெட்டு ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இதையடுத்து 'பாகிஸ்தானுக்கு தக்கப் பதிலடி கொடுத்தாக வேண்டும்' என்ற நாட்டு மக்களின் கோரிக்கைக்கு பதில் அளித்துப் பேசிய பிரதமர், 'தக்க சமயத்தில் பதிலடி தரப்படும்' என்றார்.

 

தாக்கிப் பேசிய பாகிஸ்தான்

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அந்நாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ''காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்காவின் உதவியை நாடுவதாகவும் ஐ.நா.வின் தலையீடு தேவை'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "பாகிஸ்தான் இந்தியாவுடன் நல்லுறவை வேண்டுகிறது ஆனால் காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வராமல் அது நடக்காது'' என்று குறிப்பிட்டார்.

மேலும், "காஷ்மீரில் உள்ள புதிய தலைமுறையினர் இந்தியாவுக்கு எதிரான தங்கள் போராட்டத்தினை தொடங்கிவிட்டனர். ஜூலை மாதம் இந்திய பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்ஹான் வானி அப்போராட்டத்தின் சின்னமாக விளங்கும் 'தியாகி' " என்றும் நவாஸ்  குறிப்பிட்டார்.

 

இந்தியா பதிலடி

இதற்கு எதிராகப் பதில் அளித்துப் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய துணைத் தூதர் ஏனம் கபீர், "மனித உரிமை மீறல்களில் மிகக் கொடூரமானது தீவிரவாதம். அதுவே ஒரு நாட்டின் கொள்கையாக இருப்பது போர்க் குற்றத்துக்கு சமமானது. பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டின் விளைவுகள் சர்வதேச அளவில், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு சிக்கலாக இருந்து வருகிறது. நியூயார்க் நகரில் 2001-ம் ஆண்டு நடந்த இரட்டைக் கோபுர தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, சில நாட்களுக்கு முன்புதான் உலக மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவனை அமெரிக்கப்  படையினர் பாகிஸ்தானில்தான் கண்டுபிடித்தனர். இதுவே அந்நாடு எப்படி உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருக்கிறது என எடுத்துக் காட்டுகிறது" என்றார் பதிலடியாக. 

 

மேலும் அவர், 'பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு' என்றும், ''வெளிநாடுகளில் இருந்து வரும் கோடிக்கணக்கான நிதியுதவி பணத்தை தீவிரவாத அமைப்புகளுக்கு அது மறைமுகமாக அனுப்புகிறது. பாகிஸ்தானில் ஜனநாயகம் இல்லை. அரசே அந்நாட்டின் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குகிறது'' எனவும் குற்றம் சாட்டிப் பேசினார்.

 

சுஷ்மா பேசுவாரா?

நவாஸ் அமெரிக்காவிடம் விடுத்துள்ள கோரிக்கை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான  உறவில், இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மக்களேகூட நவாஸின் கோரிக்கைக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், வருகிற 26-ம் தேதி இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஐக்கிய நாடுகள் சபையின் 71-வது கூட்டத்தில் பேசவுள்ளார். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

 

அமெரிக்காவின் பதில்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நவாசின் கோரிக்கைக்கு பதில் அளித்துப் பேசிய அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி, "அமெரிக்கா எப்போதுமே தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் எடுத்திருக்கிறது. பாகிஸ்தான் எங்கள் நட்பு நாடு. அது தீவிரவாதத்துக்கு எதிராகத் தற்போது கணிசமாகச் செயல்பட்டு வந்தாலும், உள்நாட்டு தீவிரவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தீவிரவாதத்தை வளர்த்தெடுக்க அமெரிக்கா எந்த வகையிலும் துணை நிற்காது" என்று பாகிஸ்தான் தலையில் 'குட்டு' வைத்துள்ளார்.

 

- ஐஷ்வர்யா, ராஜவேலு ( மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

MUST READ